Tuesday, 14 February 2017

எலி வளை


நான் எதையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து 2012 ஏப்ரல் மாதம் பெங்களூரை விட்டு கிளம்பி வந்தேனோ அதையெல்லாம் செய்ய வேண்டிய நிலைமைக்கு காலம் என்னை நகர்த்தி கொண்டு வந்திருக்கிறது.

நான் கல்வி கற்ற கல்லூரிகளும், பல்கலைக்கழகமும், அங்கே சந்தித்த நண்பர்களும், தொடர்ந்து வந்த வாசிப்பும் எனது மனநிலையை சராசரிக்கும் மேலானதாக மாற்றி விட்டது என்று நம்புகிறேன். நீங்கள் தாராளமாக அதிகப்பிரசங்கி என்று சொல்லலாம்.

உங்களுக்கு பிடித்த வேலை என்று ஒன்று இருக்கலாம். அந்த வேலையை செய்து வாழ்வை நகர்த்த அதனுடன் உங்களுக்கு பிடிக்காத ஓராயிரம் வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகலாம்.

சரி என்று அப்படி ஒரு வேலையை பார்த்துக்கொண்டு, சொந்த ஊரில், வீட்டில் இருந்து கொண்டு இருக்கலாம் என்றால் நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு குடுக்கும் சம்பளம் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும். நாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமான தொகையை சென்னை போன்ற நகரில் இருக்கும் நண்பர்கள் வீட்டு வாடகையாக கொடுத்து கொண்டிருப்பார்கள்.  உறவுகள் நம்ம ஊர்ல நீ வாங்குறது அதிகம், சொந்த வீடு, வீட்டுச்சாப்பாடு என்று நம் மனதை தேற்றுவது போல ஒரு பாவனையை நிகழ்த்துவார்கள். இந்த சம்பளத்தை கண்டு பொறாமை படும் நண்பர்களை கண்டால் சிரிப்பு தான் வரும்.

உடன் வேலை பார்ப்பவர்கள் ஏன் பெங்களூரு போன்ற நகரத்தை விட்டு வந்தீர்கள் என்கிற ரீதியில் கேட்பார்கள்.

ஒரு சிறிய ஊரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்காக  மாநகரத்திற்கு இடம் பெயருவது அவ்வளவு எளிதல்ல. 99% பேர் நண்பர்கள் அறையை நம்பி தான் ஊரில் இருந்து வேலை தேடி தினம் பேருந்து, ரயில் என்று ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறையில் நண்பன் மட்டுமல்ல நண்பனின் தம்பி, தம்பியின் நண்பன், அந்த நண்பனின் அண்ணன் என்று ஒருத்தனை வைத்து ஒரு டஜன் பேர் வந்து சேர்ந்திருப்பார்கள்.

வேலை கிடைத்துவிட்டது என்றே வைத்து கொள்வோம். காலையில் குளித்து கிளம்புவதில் இருந்து வரிசை, தண்ணீர் காலியாகி விடுமோ என்ற பதட்டம், பேருந்தில் கூட்டம் சேர்ந்து விடுமோ, சாப்பாடு எங்கே சாப்பிடலாம்?! அப்படியே சாப்பிட்டாலும் அது சாப்பிட்ட மாதிரியே இருக்காது. மதியம் ஆனதும் பசிக்குமே, சாப்பிடும் இடத்தில் குடிக்கும் தண்ணீர் ஆரோக்கியமானது தானா?! என்று சோறு சார்ந்த பிரச்சினைகள் ஆயிரம் முளைக்கும். நீ செஞ்சு பழக வேண்டியது தான?! பசங்க ஆளுக்கு ஒரு வேலைய பார்த்தா நிம்மதியா வீட்டுல செஞ்சு சாப்பிடலாம் என்று ஆள் ஆளுக்கு யோசனை சொல்வார்கள். அவனவன் குளிச்சு கிளம்பவே நேரம் இல்லை இதில எங்க சோறு பொங்குறது?!

மெஸ் என்று பார்த்தாலும் ஒரே வாரத்தில் கசந்து விடும். இந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணிக்கோ என்று master plan போட்டு தருவார்கள். எனக்கு தெரிந்து கல்யாணம் பண்ணவன் எல்லாம் அட்டவணை போட்டு சோறு பொங்குறான், பாத்திரம் விளக்குறான். நாமளும் பழகி வைக்கணும் போல என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.

மாநகரத்தில் ஈட்டியத்தில் பாதியை, சில சமயம் அதற்கும் மேலாக வீட்டு வாடகையும், சோற்றுகணக்கும் எடுத்துக்கொள்ள என்னடா வாழ்க்கை என்று ஆகிவிடும். இதில் ஓரு நல்ல நாள் என்றால் ஊருக்கு வர எதிலும் ticket கிடைப்பதில் சிரமம். வருவதற்கு கிடைத்தால் திரும்பி போவதில் சிரமம். இது எல்லாத்தையும் கூட்டி கழித்து சொந்த வீட்டில் இருந்து கிடைக்கிற வேலையை பார்த்துக்கொண்டு சந்தோசமா இருப்போம் என்றால், அரசாங்க வேலை என்னாச்சு என்று வாறவன் போறவன் எல்லாம் கேப்பான்.

நீங்கள் சென்னையிலோ, பெங்களூரு போன்ற ஊரில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறீர்களா?! எத்தனை மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் வாடகையை உயர்த்துவார்கள் என்று தெரியுமா?! தண்ணீர், மின்சாரம் என்று தனியாக வசூல் செய்வார்கள், தீடீர் என்று பத்தாயிரம் advance அதிகமாக வேணும் என்பார்கள். நம் சம்பளம் உயரும் வேகத்தை விட அந்த ஊரில் எல்லாம் விரைந்து கொண்டு இருக்கும்.

காய்ச்சல், மண்டையடி என்றால் கூட தீவில் மாட்டியது போல் இருக்கும். விசேச நாளுக்கு ஊருக்கு செல்ல முடியாவிட்டால், உங்களுக்கு சோறு பொங்கி சாப்பிடும் திராணி இல்லா விட்டால் - குறைந்தது இரண்டு நாள் bun, jam என்று வாழத் தெரிய வேண்டும்.

வேலைகள் மாநகரத்தில் குவியும் வண்ணம் செய்தது ஆட்சியாளர்களின் பிழை. சிறிய நகரங்களில் மாநகரத்திற்கு இணையான சம்பளம் இல்லாமல் செய்ததும் இவர்களின் கைவண்ணம் தான். தாராளமயம், உலக மயம் என்று சங்கம் வைத்து செயல்படும் ஆட்களை சோம்பேறி என்று கூறி உழைப்பவனை பாதுகாப்பற்ற ஆளாக மாற்றி விட்டார்கள்.

சென்னை போன்ற ஊருக்கு வருபவர்கள் அந்த ஊரின் மேல் உள்ள காதலாலோ, அன்பாலோ வரவில்லை. பிழைக்க மட்டுமே வருகின்றனர். இது ஒரு மாதிரி விட்டேத்தியான மனநிலையில் கொண்டு விடுகிறது. வேரும் இல்லாமல் விழுதும் இல்லாமல் ஓரு உயிரற்ற வாழ்க்கையை ஏற்று கொண்டு விடுகிறார்கள்.

இங்கே இவ்வளவு தூரம் தத்துவவிசாரம் செய்வது நான் 2017ம் ஆண்டின் முதல் நாள் நான் மீண்டும் வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நிலைமை வந்ததால் தான்.

ஒரு சுயநிதி கலைக்கல்லூரியில் கூலிக்கு மாரடித்து கொண்டிருந்த போது கொஞ்சம் பிரபலமான பொறியியல் கல்லூரியில் நியாயமான சம்பளத்தில் வேலை கிடைக்க கலைக்கல்லூரிக்கு ரூபாய் 35052 தண்டமாக கட்டி வெளியே வந்துவிட்டேன்.

அந்த கல்லூரியில் வேலை பார்த்ததற்கு பணம், நேரம், நஷ்டமானது தான் மிச்சம். இத்தனைக்கும் அரசு உதவி பெறும் பிரிவுக்கு பணம் வாங்காமல் தான் நியமனம் செய்வோம் என் பத்தாண்டுகளாக கம்பு சுத்தி கொண்டிருப்பவர்கள் சுயநிதியில் கடலை மிட்டாய் வாங்க கூட வசதியில்லாத மாதிரி சம்பளத்தில் வேலை பார்த்தவனிடம் பணம் புடுங்குவது என்ன மாதிரியான கொள்கைச்செயல்பாடு என்று தெரியவில்லை.

'என்ன சார், பணம் கொஞ்சம் அதிகமாக இருக்கே, ஒரு மாசத்துக்கு அப்டின்னா குடுத்திடலாம்' என்று பேசினால், "அய்யாவை பத்தி எல்லாருக்கும் தெரியும், எல்லாருக்கும் ஓரே மாதிரி தான் வாங்குவோம், நீங்க நல்லா தான் work பண்ணுனீங்க, வேணும்னா Office சூப்பிரண்டு கிட்ட கேளுங்க" என்று இயக்குனர் நம் முகத்தை பார்த்து பேசாமல் டேபிள் மேல் இருக்கும் பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே பேசுவார். ஒரு நொடி கூட நம் கண் பார்வையை சந்திக்க மாட்டார். ஆபீஸில் கேட்டால் இயக்குனர் சொல்றது தாம் என்பார்கள். சரி போங்கடா என்று காசை விட்டெரிய வேண்டியது தான்.

இப்போது புதிய கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாயிற்று. இந்தியாவில் கல்லூரிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்று முதல் நாளிலேயே தெரிந்த நிமிடம் 'பணத்திற்காக தானே இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்' என்று சமாதானம் செய்து கொண்டு வீட்டில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கல்லூரிக்கு தினம் வந்து போனால் ஒரு வாரத்தில் ICU வில் வைக்க வேண்டிய அளவுக்கு என் உடல் நிலை மோசமாகி விடும் என்று எனக்கே தெரியும். அதனால் கல்லூரியில் உள்ள விடுதி பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றால் அதே ஊரில் குடியிருக்கும் அருமை நண்பன் "ஹாஸ்டல் தலைவலி மாப்ள, நம்ம வீட்டுக்கு கீழ ஒரு room இருக்கு அத பாரு, பிடிக்காட்டி வேற பாத்துருவோம்" என்று என் வேலையை எளிதாக்கினான்.

அவன் வீட்டில் காலை சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அறையை சென்று பார்த்தால் அது அப்படி ஒன்றும் சிலாக்கியமாக இல்லை. நான் பெங்களூரில் தங்கியிருந்த அறையை 'hole in a wall' என்று கேலியாக சொல்வேன். இந்த அறை அதை விட சிறிது. எலி வளை என்று சொல்லலாம். அந்த அறைக்கு இரண்டு கதவுகள். ஒன்று வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் கதவு. இன்னொன்று அறையில் இருந்து வீட்டு முதலாளியின் வீட்டிற்குள் நுழையும் கதவு. ஒரு அறைக்கு ரெண்டு சன்னல் இருக்கலாம் ஆனால் இரண்டு கதவு கூடாது என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே வந்து விட்டேன்.

வீட்டு முதலாளி உடல் நலக்குறைவால் கை கால் நடுக்கத்துடன் குழறிக்குழறி பேசியபடி இருந்தார். அந்த அறையில் IT கம்பெனியில் வேலை பார்த்தவர் தங்கியிருந்தார் என்ற வரலாறு எனக்கு சொல்லப் பட்டது. 'அதனால அந்த அறை சிறப்பு மிக்கதாக ஆகி விடுமா?!' என்று நினைத்து கொண்டு அந்த அறையில் கிடந்த சாமான்களை நோட்டம் விட்டு விட்டு சத்தியமா இது தேறாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில் துறை தலைவரிடம் இது குறித்து கேட்டால் "பழக்கடை பாண்டி நிறைய வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்காறாம், கேட்டு பாருங்க" என்று பனங்காய் தலையை இடம் வலமாக ஆட்டியபடி பேசி விட்டு சென்றார்.

விடுதி காவலரிடம் பேச்சு குடுத்து அவர் என் சாதி வரை விசாரித்து, 'ஹாஸ்டல்ல இருந்தா 5000 ருவாய்க்கு மேல உங்களுக்கு மிச்சம் தான' என்று இலவச ஆலோசனை சொன்னார். இந்த உலகத்தில் இலவசமன்னு எதுவுமே இல்லை. இதை குடுத்திட்டு வேற வேலை நிச்சியம் வாங்குவாங்க என்று தெரியும்.

இப்ப என்ன?! புத்தகம் படிக்கவோ, சினிமா பார்க்கவோ, துணி துவைக்கவோ, நண்பர்கள் அழைத்தால் போகவோ முடியாது. ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம். இரண்டு வேளை கடைச் சாப்பாடு. வீட்டில் இருந்து வந்துட்டு போனா என்ன?! கொஞ்சம் பைத்தியகரத்தனமாக தோன்றினாலும் நாஞ்சில் நாடனின் 'வீடென்பது ஒரு ஆசுவாசம் அல்லவா' என்ற வரி மனதில் அமர்ந்து விட்டது.

அருவியில் இருந்து நீர் ஆர்ப்பரித்து விழுவது போல மனதிற்குள் இந்த யோசனை வேகமாக விழுந்து கொண்டு இருந்தது. ஒரு வாரம் முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று ஒரு அசட்டுத்தனமான முடிவொன்றை எடுத்தும் விட்டேன். முதல் வேலை நாள் முடிந்து விரைவாக கல்லூரியை விட்டு பேருந்தை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.

யாரிடமாவது lift கேட்போம் என்று ஒருவரிடம் 'என்னை அங்க இறக்கி விட முடியுமா என்று கேட்டேன்' 'வாங்க வாங்க' என்று அவர் என்னை அழைத்து கொண்டார். பின்னால் அமர்ந்து அவரிடம், நான் வேலைக்கு சேர்ந்தது, தங்குவதற்கு இடம் தேடுவது என்று சகலத்தையும் சொன்னேன். அவர் 'அதெல்லாம் நிறைய நல்ல room கிடைக்கும், நான் வேணா காட்டுறேன்' என்று சொன்னார். வண்டியை பாலத்தின் மத்தியில் நிறுத்தி, தூரத்தில் கையை காட்டி, 'அந்த கட்டிடத்துல கேட்டு பாருங்க' என்றார். என்னை அங்கே கூப்பிட்டு போக முடியுமா என்று நான் கேட்க அங்கே அழைத்தும் சென்றார். கதவில் மாட்டப்பட்டிருந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை பார்த்து வீட்டின் முதலாளியை அழைத்தேன். அவர் ஐந்து நிமிடத்தில் வருவதாக கூறினார். என்னை அழைத்து வந்த அந்த நண்பர் அவருடைய தொடர்பு எண்ணை குடுத்து தெரிஞ்ச ஆள் பக்கத்துல யாரும் சொன்னா தான் தருவேன் அப்டின்னு சொன்னா எனக்கு கூப்பிடுங்க என்று சொல்லி விட்டு சென்றார்.

முதலாளி 65 வயது மதிக்கத்தக்க ஒரு நபர். வெளியே இரண்டு கடைகள், பெரிய கதவிற்கு பின்னால் Qualis வண்டி, ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்லும் அளவிற்கு இடம் மீதி இருந்தது. வீட்டிற்கு பின்புற கதவு வழியே இரு சக்கர வாகனத்தை கொண்டு வர இடம் இருந்தது. அவர் என்னை உள்ளே அழைத்து சென்றார்.

கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கும் மேலாக அங்கே மருந்து கொண்டு வந்து தந்த நபரிடம் அவர் கொடுத்தார். ஒரு மாதத்திற்கு மொத்தமாக வாங்கி வைத்து கொள்வேன் என்றார். இரண்டு நாளுக்கு பின்னர் இவர் மருந்து கையாளும் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று எனக்கு தெரிய வரும்.

நான் கடவுள் படத்தில் உருப்படிகளை பாதாளத்தில் அடைத்து வைத்தது போல ஒரு இருட்டான பாதையில் மின் விளக்கை ஏற்றி வெளிச்சமாக்கி கொண்டு மாடிப்படி ஏறி சென்றார். செருப்பை கழட்டி விட சொன்னார். என்ன இந்த ஆள் செருப்பை கழட்ட சொல்றான், இது சரி வராது என்று நினைத்து கொண்டு தொடர்ந்தேன்.

எலிகளை பார்த்து வீடுகளை கட்ட முடியும் என்று அவர் காட்டிய அறைகளை பார்த்தவுடன் மனதில் தோன்றியது. ஒருவர் தாராளமாக இருக்கலாம் என்பது மாதிரியான அறை. இன்னொருவர் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம் எக்ஸ்ட்ரா 300 ரூபாய் குடுத்திருங்க என்றார். ஒவ்வொரு அறைக்கும் தனியாக அதன் எதிரிலே குளியலறை. நீங்கள் சமைக்க வேண்டும் என்றால் என்று ஒரு அறையை காட்டினார். அதற்கும் குளியலரைக்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் கதவையே பயன்படுத்தியிருந்தார்.

இங்க tea போட்டுக்கலாம், காலைல breakfast கூட பண்ணிக்கலாம் என்று அடுக்கி கொண்டே போனார். உள்ளே gas stove வைக்கும் அளவுக்கு கூட அதன் மேடையின் நீளம் இல்லை. Induction stove வைத்து வெண்ணி வேணா வைக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.

எப்படி பார்த்தாலும் வேலை பார்க்கிற இடத்துக்கு பக்கத்துல. பல்லை கடிச்சுக்கொண்டு நாலு நாள் தூங்கி எந்திருச்சு வெள்ளி சாயங்காலம் ஊருக்கு ஓடிட வேண்டியது தான் என்று திட்டம் வகுத்து விட்டு ஞாயிறு மாலை வருவதாக சொல்லி விட்டு வந்தேன்.

மறுநாள் மீண்டும் வீட்டிற்கு வெளியே வாழ்வதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். எவ்ளோதான் முயன்றாலும் துக்கம் தொண்டையை இறுக்குவதை உணராமல் இல்லை. போன வாரம் வரை வீட்டில் உதிக்கும் முரண்பாடுகளுக்கெல்லாம் ஒரே தீர்வு வீட்டை விட்டு வெளியே சென்று தங்குவது தான் நினைத்து கொண்டிருந்த நான், அந்த வாய்ப்பு வந்த உடன் அதை தள்ளி போட முடியாதா என்று தான் யோசித்து கொண்டிருந்தேன்.

எனக்கு வேற வேலை கிடைக்கவும் இந்த வீட்டை விட்டு போய்டுவேன். அப்புறம் வரவே மாட்டேன் என்று பல முறை என் அப்பாவிடம் சொல்லி இருக்கிறேன். வெளிநாடு வாய்ப்பு வந்தால் அப்டியே போய் செட்டில் ஆகிடணும். இந்த நாடே வேண்டாம் என்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன்.

இப்பொது வீட்டை விட்டு மீண்டும் ஒரு முறை வெளியே சென்று வாழும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது, ஆனால் மனசு அதை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி போடுவதிலேயே குறியாக இருக்கிறது.

ஒரு வழியாக வேண்டியவற்றை மூட்டை கட்டி விட்டேன். 5 நாள் tour போற மாதிரி தான். Room காலி பண்ணுனா கைலையே எல்லாத்தையும் எடுத்துட்டு வார மாதிரி இருக்கணும் அப்டிங்கிறது முதல் விதி. தேவைக்கு அதிகமா எதையும் வச்சிருக்க கூடாது. ரெண்டு புத்தகம் போதும். Dictionary phone ல பாத்துக்கலாம்னு 5 நாளுக்கு தேவையான துணி மற்ற பொருட்களுடன் ஞாயிறு மதியம் அப்பாவை அழைத்து கொண்டு வண்டி ஏறி விட்டேன்.

தனியாக சென்று அறையை பேசி தங்கி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். இதை நண்பனிடம் சொன்ன போது. 'அப்பாவை கூட்டிட்டு போடா, எங்க தங்கி இருக்க அப்டின்னு வீட்டுல தெரியணும்ல' என்று சொன்னான். இது ஏன் எனக்கு தோணவில்லை என்று மனதில் ஓடியது. பிறகு அப்படியே செய்தேன்.

பேருந்தில் செல்லும் போது 'Leaving the comforts of home, Once again' என்று whatsapp status வைத்தேன். அந்த வரி சிந்தனையில் ஒட்டிக்கொண்டு கண்ணீரை இறைக்க முயன்று கொண்டு இருந்தது. நான் கட்டு படுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அழுது விட்டால் எல்லாம் சரி ஆகி விடும் போல் இருந்தது.

அறை இருந்த இடத்தை அடைந்து முதலாளியிடம் முன்பணம் எல்லாம் குடுத்து அறையை அப்பா தூசி தட்ட ஆரம்பித்து விட்டார். நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். பின்னர் fan ல் இருந்த தூசியை துடைக்கிறேன் என்று கட்டில் மேல் ஒரு stool போட்டு அதை துடைத்தேன்.

இது முடியவும், நானும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு நாளைக்கு காலைல college வந்திடுறேன் என்று அப்பாவிடம் சொல்ல, 'அதெல்லாம் வேண்டாம், சும்மா அலைய வேண்டாம், நல்லா தூங்கி எந்திருச்சு வேலைக்கு போ' என்று சொல்லி விட்டார்.

நான் பல்லைக் கடித்துக்கொண்டு துணி துவைக்கும் இடத்தை பார்த்து விட்டு வாறேன் என்று மாடிக்கு சென்றேன். எலி வளைக்கு மேலும் ஒரு வானம் உண்டு.  நாலரை வருடங்களாக வீட்டில் இருந்ததால் இல்லாமல் போய் விட்டதாக நான் நினைத்த சிறகு வானத்தை பார்த்த உடன் உயிர் பெற்று விட்டது. அருகே யானை சரிந்து படுத்திருப்பது போல ஒரு குன்று அமைதியாக மாலை வெயிலில் நனைந்து கொண்டு இருந்தது.

Saturday, 7 January 2017

Biutiful - அறமெனப்படுவது

சென்னையில் இழுந்த விடிந்த 11 மாடி கட்டிடத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் வேறு மாநிலங்களில் இருந்து குறைந்த கூலி பேசி அழைத்து வர பட்டவர்கள். இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் உழைப்பு மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பதை விட உழைப்பவர்களை எளிதாக சுரண்ட முடியும் என்பது தான் நிதர்சனம். இறந்தவர் காப்பீடு உள்ளவரா? அவர் குடும்பத்திற்கு என்ன நிவாரணம் கிடைத்தது? என்பது குறித்து ஊடகங்கள் அக்கறை பட்டதாக தெரியவில்லை. வீடு வாங்கியவர்கள் குறித்து அதிகம் கவலை பட்டிருப்பார்கள்.

2013ல் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் மொத்தம் எத்தனை என்று யாருக்காவது தெரியுமா?!

'Bad for business' என்று அரசும், அமைப்புகளும் இப்படி உழைத்து பிழைக்கும் மக்களின் அகால மரணத்தை மறைப்பது 'உலக மயமாக்கல்' என்னும் சித்தாந்ததோடு பிண்ணி பிணைந்தது. இந்த உலகமயமாக்கல் பணக்காரர்களை பெரும் பணக்காரர்கள் ஆக்க தங்கள் ஊரில் அன்றாடம் உழைத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் விரட்டி விட்டது.

இதில் இடைத்தரகர் என்று ஒரு இனம் உருவாகி செழித்து வளர்ந்து விட்டது. கட்டிட வேலைக்கு ஒப்பந்தம் பேசி அழைத்து வருவார்கள். பேசிய கூலியில் ஒரு பகுதி எப்போதும்
இடைத்தரகரிடம் தான் இருக்கும். அப்போது தான் இவருக்கு தெரியாமல் கூலிக்கு வந்தவர்கள் வேறு வேலை தேட மாட்டார்கள்.

அப்படி ஒரு இடைத்தரகனை பற்றிய படம் தான் Biutiful.

Barcelona, Spain தான் படத்தின் பின்புலம். Barcelona என்றவுடன் அவனை தெரியும், இவனை தெரியும் கால்பந்து விளையாடுபவன் பெயரை சொல்லி கொண்டு நம்ம சுள்ளான்கள் துள்ளி குதிப்பதை காணலாம். இது ஒரு மாதிரி பைத்தியக்காரத்தனம் தான். அது நம்மவர்களுக்கு கொஞ்சம் அதிகம்.

கதா நாயகன் Uxbal தனது குழந்தைகளுடன் ஒரு புறாக்கூண்டு போன்ற apartment வீட்டில் வசிக்கிறான். மகள் Anaவிற்கு 10 வயது, மகன் Mateo விற்கு 5 வயது. இவர்கள் பள்ளி முடிந்து தந்தை வரும் வரை ஒரு சீன தாதி வீட்டில் இருப்பார்கள். குழந்தைமை நீங்காத அந்த சீன பெண்ணிற்கு ஒரு வயதில் ஒரு குழந்தை.

(புத்தகம் படிப்பதை ஏளனமாக நினைக்கும் சிலரிடம் ஒரு புத்தகத்தை பற்றி சுவாரசியமாக சொல்லி முடிவை சொல்லாமல் விட்டால் உடனே கடைசி அத்தியாயத்தை படித்து முடிவை தெரிந்து கொள்வர்.

அதுபோல திரைப்படம் பற்றி பேசும் பலரும் climax குறித்து பேசுவதுலேயே இருப்பர். Climax பற்றி தெரிந்து விட்டால் பின்னர் அந்த படத்தை பார்ப்பதில் என்ன சுவாரசியம்?! )

Uxbal ஆரம்ப காட்சியில் தனது மகளுக்கு தன்னுடைய அம்மாவின் வைர மோதிரத்தை அணிவித்து விட்டு பேசிக்கொண்டிருக்கிறான். திரையில் நாம் இருவரின் கைகளை மட்டுமே பார்க்கிறோம். பின்னர் காட்சி அப்படியே வென் பனி விழுந்து மூடிய சவுக்கு மரங்கள் நிறைந்த காட்டிற்கு நகர்கிறது. பின்னணியில் Ana அப்பா என்று அழைப்பது கேட்கிறது. தன்னுடைய வயதில் பாதி வயது உடைய தோற்றம் கொண்ட ஒருவரை Uxbal அப்பா என்கிறான். அவரும் 3 வயது பையனுடன் பேசுவது போல விளையாட்டு காட்டி Uxbal உடன் பேசுகிறார்.

Uxbal, Extra Sensory Perception உடைய ஒரு ஆள். அதாவது அவரால் இறந்தவர்களோடு பேச முடியும். அவர்கள் நிம்மதியாக இந்த உலகை விட்டு சென்றார்களா என்று கேட்டு சொல்ல முடியும். விபத்தில் இறந்து போன மூன்று சிறுவர்களின் உடல் கிடத்த பட்ட இடத்திற்கு Uxbal வருகிறான். இறந்து போன சிறுவனின் கையை பிடித்து கண்ணை மூடி தியானிக்கிறான். பின்னர் வெளிய வந்து தந்தையிடம் பேசுகிறான். அவர் மகனை பற்றி தப்பாக சொல்லி விட்டதாக பையனின் அம்மா Uxbal க்கு பணம் கொடுக்க விடாமல் தடுக்கிறாள்.

Uxbal தனக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதை மருத்துவ சோதனை மூலம் அறிந்து கொள்கிறான். மிகவும் முற்றிய நிலையில் இருப்பதால் உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார். கடமைகளை செய்து முடி. உனக்கு அதிக நாட்கள் இல்லை என்கிறார். அதிகபட்சம் இரண்டு மாதம் கெடு அதற்குமேல் உத்திரவாதம் இல்லை என்கிறார்.

Uxbal அரசு ஊழியனாக இருந்தால் பிள்ளைகளுக்கு insurance பணம் வரும் என்று சிகிச்சையை ஆரம்பிக்கலாம். இடைத்தரகு வேலை செய்து அவன் பெரும்பணமும் சேர்க்கவில்லை. அவனுடைய மனைவிக்கு bipolar disorder பிரச்சினை இருக்கிறது. அவளை நம்பி குழந்தைகளை விட முடியாது. இரண்டு மாதத்தில் தன்னால் முடிந்ததை சேர்த்து பிள்ளைகளை நம்பிக்கையான ஆள் கையில் ஒப்படைக்க முடிவு செய்கிறான்.

Uxbal குழந்தைகளுடன் உணவருந்தும் போது மகன் Mateo விற்கு table manners குறித்து சொல்லி கொண்டே இருக்கிறான். மகன் அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணிப்பதை பொறுக்காமல் திட்டுகிறான். பையன் அன்றிரவு படுக்கையை ஈரம் செய்து விட்டு தானே அதை மறுநாள் துவைத்து விடுவதாக சொல்கிறான். Uxbal அவனை சமாதானம் செய்கிறான்.

Uxbalன் உலகம் திரையில் விரிகிறது. வெவ்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய மக்கள் branded show rooms நிரம்பிய shopping area வெளியே மலிவு விலை duplicate branded handbag, purse என்று விற்கிறார்கள். அவர்களில் Senegal நாட்டை சேர்ந்த Ekweme என்பவன் Uxbalக்கு நண்பன். அவனிடம் இங்கே வைத்து விற்க வேண்டாம் என்றும், police கவனிக்கிறது என்றும் சொல்கிறான். Handbag வித்து வரும் வருமானம் காணாமல் அவர்கள் போதை பொருளும் விற்கின்றனர்.

Uxbal handbag தயாரிக்கும் sweat shop(குறுகிய இடத்தில அதிகமான ஆட்களை அடைத்து ஒரு பொருளை உற்பத்தி செய்வது)  அதை வாங்கி விற்கும் ஆப்ரிக்கர்களுக்கு மற்றும் police நடுவில் தான் தன்னுடைய வாழ்வாதாரத்தை தேட வேண்டும். இந்த handbag வியாபாரத்தில் வரும் வருமானம் காணாது என்று தனது அண்ணனிடம் பேசி கட்டிட வேலைக்கு ஆட்கள் திரட்டி தருவதாகவும் அதற்கு தான் கேட்கும் பணம் வேண்டும் என்றும் சொல்கிறான்.

இதற்கிடையில் போதை பொருள் விற்று Ekweme மாட்டிக்கொள்கிறான். அவனுக்கு உதவ சென்று Uxbalம் சிறை சென்று மீள்கிறான். Ekweme குடும்பத்திற்கு உதவி செய்வது தனது கடமை என்று நினைக்கிறான்.

அப்பாவின் கல்லறை இருக்கும்  இடத்தில் shopping mall வர இருப்பதாகவும் அதை கொடுத்தால் பணம் வருமென்று அண்ணன் சொல்ல Uxbal பணத்தேவை இருப்பதால் சரியென்கிறான். Uxbal ன் அப்பா அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு 20 வயதில் Mexico விற்கு ஓடிப்போனவர். Uxbal பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டதால் Mexico வில் உடலை பதப்படுத்தி Spain கொண்டு வந்து அடக்கம் செய்திருப்பார்கள். Uxbal தனது தந்தையின் உடலை பார்க்க வேண்டும் என்கிறான். 40 வருடங்களுக்கு முன்னால் பதப்படுத்தப்பட்ட தந்தையின் உடலை Uxbal கலவையான உணர்ச்சிகளுடன் பார்க்கிறான்.

கட்டிட contract கை கூடி வரும் போல் தெரியவும் வேலைக்கு அழைத்து வரப்பட்ட ஆட்கள் தங்கும் இடத்திற்கு heater வாங்கி வைக்கிறான். சிக்கனமாக செலவு செய்து அவன் வாங்கி வைத்த heater சரியாக வேலை செய்யாமல் போய் விடுகிறது.

இதனால் ஏற்பட்ட விபத்து Uxbalன் மனதின் நொறுக்கி விடுகிறது. உடல் ரீதியாக செத்து கொண்டிருக்கும் Uxbal இதனால் பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான். தன்னுடைய பிள்ளைகளை பற்றி யோசித்தவன் மற்றவர்களை பற்றி ஒன்றுமே நினைகவில்லையே என்று கதறி அழுகிறான்.

மனிதர்கள் எப்போதும் நூறு சதவிகிதம் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்க மாட்டார்கள், சுயநலம், குடும்ப நலம், தன் சமூகம் சார்ந்த நலன் என்று தன்னை முன்னிலை படுத்தி தான் செயல்படுவார்கள். கொஞ்சம் விசாலமாக சிந்தித்து செயல் படுபவர் அசாத்தியமான தைரியியமும், தன்னம்பிக்கையும் உடையவராக இருப்பார். அப்படி இருப்பவரை அவரை சுற்றி உள்ளவர்கள் கீழே இழுக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

இங்கே Uxbal மனசாட்சிக்கு விரோதமாக நடப்பதை முடிந்த அளவுக்கு தவிற்கிறான். தான் செய்த தவறு குறித்து வருந்துகிறான். தன்னால் இன்னொருவர் நாடு கடத்தப்படும் நிலைமைக்கு ஆளாகும் போது Barcelona வில் எஞ்சும் அவரது குடும்பத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்கிறான்.

Biutiful ஒரு character study என்றே சொல்லலாம். No Country for Old Men படத்தில் கதி கலங்க வைக்கும் வில்லனாக, Vicky Cristina, Barcelona வில் play boy கவிஞன் Sky Fall ல் Dark Knight joker பாணி வில்லன் என்று கலவையான கதா பாத்திரங்களில் நடித்த Javier Bardem தான் இங்கே ஒரு நடுத்தர வயது குடும்ப தலைவனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை பார்க்க வேண்டிய படமாக மாற்றுவதில் Javier Bardem ன் நடிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு.

தன்னுடைய முதல் மூன்று படங்களை non-linear பாணியில் எடுத்த Alejandro Gonzalez Inarittu இதில் 99% நேர்கோட்டில் கதை சொல்லியிருக்கிறார். அந்த 1% twist படத்தை பார்த்து முடிக்கும் போது புரியும். இந்த படத்தை இயக்கிய பின் Inarittu Birdman, The Revenant என்று அடுத்தடுத்த வருடங்களில் 2 Oscar விருதுகள் வாங்கும் அளவிற்கு Hollywood ல் முக்கிய இயக்குனராக உயர்ந்து விட்டார்.

Biutiful. பெயரை போலவே அழகான படம்.

Saturday, 24 December 2016

Wild Tales - கடவுள் பாதி மிருகம் பாதி


Hollywood ல் 3 Act structure என்று திரைக்கதைகான ஒரு இலக்கணம் வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் இதை அடியொற்றியே திரைக்கதை எழுதப்பட்டு அது படமாகும்.

Richard Linklater, Coen Brothers, Paul Thomas Anderson போன்ற இயக்குனர்கள் விதிவிலக்கு. வணிக வெற்றி தாண்டி யோசிக்கும் போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பெரிய வெற்றி அடைவதும் உண்டு.

திரைக்கதை எழுதுவதிலும் புதிய புதிய முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் Pulp Fiction ஒரு trend setterபடம். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள், அவைக்கு பொதுவான ஒரு சரடு என்று non linear பாணி கதை. அதாவது 1,2,3 என்று வரிசையாக கதை நகராமல் 4,2,1,3,7,5  என்று நகரும். சீட்டு கட்டை கலைத்து போட்டு விளையாடுகிறோம். ஆனாலும் நமக்கு விளையாட்டு புரிகிறது தானே, அதே போல் இந்த non linear பாணியும். பார்த்து முடிக்கும் போது ஒரு அனுபவமாக மாறி விடும். எது மாதிரியும் இல்லாத ஒரு அசலான படம் என்று உணர்வோம்.

இப்படி non linear பாணியில், Magnolia, Memento, Amores Perros, Babel போன்றவை உலக புகழ் பெற்ற ஆக்கங்கள்.

இங்கே நாம் பார்க்க போகும் Wild Tales திரைப்படம் இதிலிருந்து ஒரு படி மேலே என்று கூறத்தக்க படம். படத்தில் மொத்தம் 6 குறும்படங்கள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான மையம் உள்ளது ஆனால் ஒரு கதையில் வரும் கதா பாத்திரங்கள் வேறு எந்த கதையிலும் வர மாட்டார்கள்.  இது linear பாணி கதை என்பது கூடுதல் சிறப்பு.

ஒன்று: Pasternak
ஒரு நவீன உடை அணிந்த பெண் விமானத்திற்கான பயணச்சீட்டு  வாங்கிக்கொண்டு அது தன்னுடைய பயணம் செய்த தூரக் கணக்கில் சேருமா என்று விசாரித்து விட்டு விமானத்தில் சென்று ஏறுகிறாள். அருகில் இருந்த நபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய முன்னாள் காதலன் Gabriel Pasternak குறித்து அவருக்கு தெரியும் என்பதை கேட்டு ஆச்சரிய ப்படுகிறாள். அந்த விமானத்தில் பயணம் செய்யும் மேலும் இருவர் தங்களுக்கும் Pasternak அறிமுகம் தான் என்று சொல்கிறார்கள். மீதியை திரையில் பாருங்கள்.

இரண்டு: The Rats

மழை பெய்யும் ஒரு இரவில் வாடிக்கையாளர் யாரும் இல்லாத உணவு விடுதிக்கு ஒருவர் வருகிறார். பணிப்பெண் ஓடி வந்து வரவேற்கிறாள். என்ன வேணும் என்று விசாரிக்கிறாள். Order எடுத்து கொண்டு உள்ளே செல்கிறாள். ஆனால் இதற்குள் கடைக்கு வந்திருக்கும் அந்த நபர் தனது தந்தை தற்கொலை செய்து கொள்ள காரணமானவர் என்றும் தனது தாயை மான பங்க முயற்சி செய்தவர் என்றும், இவருக்கு பயந்தே இடம் பெயர்ந்து இங்கு வந்ததாகவும் சமையலை கவனிக்கும் நடுத்தர வயது பெண்ணிடம் கூறுகிறாள். வந்தவர் அரசியல் புள்ளி என்றும் கூறுகிறாள். நடுத்தர வயது பெண் அவருக்கு சமைத்து கொண்டே அதில் எலி விசத்தை கலந்து விடவா என்று கேட்கிறாள். அடுத்தவர்களை சுரண்டி வாழும் ஆட்கள் உலகுக்கு தேவை இல்லை என்று தர்க்கத்தை அடுக்குகிறாள்.

மூன்று: Road to Hell

நீங்கள் Speilberg இயக்கிய Duel படம் பார்த்திருக்கிறீர்களா?! அதனுடைய 20 நிமிட பிரதி தான் இந்த மூன்றாவது கதை. Audi Car, Suit, Boot என்று பணக்கார ஆள் ஒருவர் சாலையில் தனக்கு வழிவிட தாமதம் ஆக்கிய நபரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு விரைந்து செல்கிறார். வண்டி puncture ஆகி விடுகிறது. வசவுகளை வாங்கிய நபர் அங்கு வந்து சேர்கிறார். அதன் பின் நடப்பவை ரணகளம், அதகளம்.

நான்கு: Bombita

இது வரை மனிதனுக்கும் மனிதனுக்குமான முரண் பாடு, பகை, வன்மம், குரோதம், பழிவாங்கும் உணர்ச்சி என்று பேசிய கதைகள் இங்கே ஒரு தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் ஏற்படும் முரண்பாட்டை முன்வைக்கிறது. ஒரு வகையில் இந்தியன், அந்நியன், எவனோ ஒருவன் பாணி என்று எளிமை படுத்தி சொல்லலாம்.

இதன் நாயகன் பழைய கட்டிடங்களை வெடி வைத்து தகர்க்கும் நிபுணன். அவர் எதையும் ஒரு கச்சித தன்மையோடு செய்பவர். அன்று பிறந்த நாள் கொண்டாடும் மகளுக்கு cake வாங்க கடைக்கு செல்கிறார். திரும்பி வரும்போது தன்னுடைய car, towing vehicle மூலம் அகற்ற பட்டிருப்பது கண்டு சினம் கொள்கிறார். அபராதம் கட்ட வேண்டிய இடத்தில் விளக்கம் கோருகிறார். மரியாதையாக நடத்த வேண்டுகிறார். எல்லாம் முடிந்து பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்கிறார். இது மனைவியுடன் ஒரு கசப்புணர்வான ஒரு உரையாடலுக்கு இட்டு செல்கிறது. மறுநாள் அபராதம் கட்ட போகும் போது மேலும் விளக்கம் கேட்டு தன்னுடைய boiling point யை அடைந்து விடுகிறார். எதிர்வினையாற்றுகிறார்.

ஐந்து: The Deal

முன்பாகம் சேதமடைந்த ஒரு BMW கார். நகரின் பணக்காரர் ஒருவரின் மகனுடையது. ஒரு கர்ப்பிணி பெண்ணை இடித்து விட்டு நிறுத்தாமல் வந்து விட்டான். ஆயிரம் இருந்தாலும் மகன் இல்லையா?!! அவனது அப்பா மகனை காப்பாற்ற தனது வக்கீலை அழைக்கிறார். பேரங்கள் ஆரம்பிக்கின்றன. 15 வருடமாக தன்னிடம் வேலை பார்க்கும் தோட்டக்காரரை பழியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம் என்று பல கணக்குகள் முளைக்கின்றன.

ஆறு: Till Death Us Do Part

மிக கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்த பகுதி புதிதாக திருமணம் ஆன தம்பதியின் விருந்து நிகழ்ச்சி கொண்டாட்டங்களை காட்டுகிறது. விருந்திற்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுடன் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருக்கிறது என்று மனைவி கண்டுபிடிக்கிறாள். ஒரு பெண்ணின் சமநிலை குலையும் போது...

நாம் நாகரீகம் கருதி பல சமயங்களில் பல விசயங்களில் விட்டு கொடுத்து விடுகிறோம். சில சமயம் எதிர்கால நலன் கருதி யாரையும் பகைக்க கூடாது என்று தெளிவாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி செயல்படுகிறோம். பொய்யாக கோபப்படுவது ஒரு கலை. அதை சிறப்பாக செய்பவர்கள் நம்மூரில் ஆட்சியாளர்களாக இருப்பார்கள். ஆறுவது சினம் என்பது அவ்வை. ரௌத்திரம் பழகு என்பது பாரதியார் வாக்கு. எங்கே நம் சினம் செல்லுபடி ஆகுமோ அங்கே தான் காட்ட முடியும். வேண்டும். இது வள்ளுவர்.

இந்த 21ம் நூற்றாண்டு மனித உரிமைகளை முன்னிறுத்தும் நூற்றாண்டு என்றாலும் நமக்குள் இருக்கும் மிருகம் விழித்துக்கொள்ள ஒரு சிறு பொறி போதுமானதாக இருக்கிறது.

70 வருடம் வாழ்ந்த மனிதனிடம் அவருடைய வாழ்க்கையை பத்தி கேட்டால் அவர் ஒரு மணி நேரத்தில் சொல்லி விடுவார் என்று ஓஷோ சொல்வாராம். வெவ்வெறு மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் உச்சகட்ட கோபம், பயம், சினம், எரிச்சல், பழி வாங்கும் உணர்ச்சி, துரோகம் என்று எதிர்மறை குணங்களை வெளிப்படுத்தம் நிமிடங்கள் இங்கே ஆறு கதைகளில் விரிகின்றன.

இந்த கதைகளில் அங்கதத்திற்கும் குறைவில்லை. Ensemble Cast என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். Argentina நாட்டு திரைப்படமான இதில் Ricardo Darin போன்ற புகழ் பெற்ற நடிகர்களும் இருக்கிறார்கள். அனைத்து கதையிலும் அனைத்து நடிகர்களும் சிறப்பான ஒரு வெளிப்பாட்டை நிகழ்த்துகின்றனர்.  எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு வெளியிடுவது போல இங்கே இயக்குனர் ஆறு குறும்படங்கள் எழுதி அதை இயக்கி ஒரே படமாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இது போல முயற்சிகள் உலகெங்கும் நடக்கின்றன. பல இயக்குனர்கள் இணைந்து உருவாக்குவார்கள். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் முயன்றார். ஆனால் Wild Tales ஒரே இயக்குனரின் கைவண்ணம்.

படத்தின் titles ரகளையான பின்னணி இசையுடன் அசரடிக்கும் visuals உடன் வரும் போது 'இது ஏதோ புதுசான படமா இருக்க போது போல' என்று மனம் எதிர்பார்க்க தொடங்கி விடும்.

ஒவ்வொரு கதைக்கும் வித விதமான நிறம், பின்புலம், இசை என்று விருந்து படைக்கிறார்கள். ஒரு கதை ஆகாயத்தில் என்றால், அடுத்த கதை இரவில், மழை நாளில். அடுத்த கதை பாலைவனம் போன்ற வறண்ட நிலத்தில். குடும்பம் சார்ந்து இரண்டு கதைகள். இறுதியாக திருமண விழா விருந்து பின்புலத்தில் ஒன்று.

மனிதர்கள் உணர்ச்சிகளை, கோபத்தை, சினத்தை, அறச்சீற்றத்தை அடக்கி கொள்ள நிர்ப்பந்திக்க படுகிறார்கள். சமூக அமைப்பு கோபப்படுபவனை, உண்மை பேசுபவனை, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்க்கிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் சினம் தவிர் என்கிறது. அதில் சில வெடிப்புகள், உடைப்புகள் ஏற்படும் போது அவை Wild Tales ஆகும்.

Thursday, 1 December 2016

ஓரு கூர்வாளின் நிழலில் - விழலுக்கு இறைத்த குருதி


இங்கே, தமிழ் நாட்டில் 1988ம் வருடம் பிறந்த நான் விவரம் தெரிந்த நாளில் இருந்து விடுதலை புலிகளின் வீர சாகச கதைகளை கேட்டு வளர்ந்தேன். 5 வயது இருக்கும் போது பள்ளியில் சேட்டை செய்ததாக என்னை அடித்த ஒரு ஆசிரியையிடம் 'இரு வவுனியாவுல இருக்க துப்பாக்கியை எடுத்திட்டு வர சொல்லுதேன், ஒரு குண்டுல இந்த பள்ளிக்கூடம் தரை மட்டம் ஆகிடும்' என்று மிரட்டல் விட பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர், முதல்வர் வரை கூடிவிட்டனர்.

5 வயதுக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் நான் இப்படி பேசும் அளவுக்கு இங்கே விடுதலை புலிகள் பற்றி குடும்பங்களில் பேசி கொண்டிருந்தனர். இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று, மதிப்பு, நம்பிக்கை கொண்டிருந்தனர். போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆன பின்னர் கூட 40, 50 வயதுகளில் உள்ளோர் இயக்கம் மீது எந்த விமர்சனத்தை ஏற்று கொள்ள தயாராக இல்லை.

25 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு 99% இயக்கம் குறித்தோ அங்கே நடந்து முடிந்த சண்டை குறித்தோ, மரணித்த மக்கள் குறித்தோ கவலையோ, சிந்தனையோ இல்லை. மேலும் ஈழம் குறித்து பேசுபவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல முறை கேட்டு சலித்த விடயத்தை தான் பேசுவார்கள். அங்குள்ள மக்களுக்கு இதனால் புல் முனை அளவு கூட பிரயோசனம் கிடையாது.

தற்செயலாக அ. முத்துலிங்கத்தின் கதைகள் வாசிக்க ஆரம்பித்து, ஷோபா சக்தி, சயந்தன் என்று ஈழ எழுத்தாளர்களின் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொருட்டு முன்னாள் இயக்க போராளி, தற்போது காலம் சென்ற தமிழினி அவர்களின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' வாசித்தேன்.

அய்யா முத்துலிங்கம் இயக்கம் உருவாகும் முன்பே வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதால் அவருடைய கதைகளில் பெரும்பாலும் இங்கே நடந்த போர் குறித்த சித்திரம் இருக்காது. ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த கதைகள் அனேகம். ஒரு கதையில் வீட்டை விட்டு இயக்கத்திற்கு செல்லும் மகள் குறித்து எழுதிய நினைவு. தலைப்பு நினைவில் இல்லை.

ஷோபா சக்தியின் கொரில்லா, ம் நாவல்களும், சிறுகதைகளும் இயக்கம் மீது விமர்சனம் வைக்க தவறுவதில்லை. அதே சமயம் இலங்கையின் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணராமலும் இல்லை.

சயந்தனின் ஆறா வடு மற்றும் பெயரற்றது மட்டுமே வாசித்துள்ளேன். ஆதிரை வாங்கியாகி விட்டது வாசிக்க தொடங்க வேண்டும்.

மேற்சொன்ன மூவரும் புனைவு எழுத்தாளர்கள். அவர்கள் எழுத்தில் நான் காணும் ஒற்றுமை அங்கதமும் அபத்தமும். ஷோபா சக்தியின் சமீபத்திய சிறுகதை 'மிக உள்ளக விசாரணை' சிறந்த உதாரணம்.

நான் பெரும்பாலும் சுய சரிதை வாசிப்பதை தவிர்த்து விடுவேன். காந்தியின் சுய சரிதை வாங்கி பத்து வருடம் ஆகிறது. ஒவ்வொரு முறையும் 10 அத்தியாயம் தாண்டாது. பிறகு கிடப்பில். The Diary of Anne Frank அதனாலேயே வாங்கவே இல்லை. The Story of Helen Keller மட்டும் வாங்கி வாசித்தும் விட்டேன்.

ஏதோ ஒரு உந்துதலில் 'ஒரு கூர்வாளின் நிழலில்' ஒரு சுய சரிதை என்று தெரிந்தும் வாசிக்க எடுத்து விட்டேன். வாசித்தும் விட்டேன். நான் புனைவில் வாசித்தது எந்த அளவு உண்மை என்று அறிய விரும்பினேனா? இயக்க தலைவருக்கு என்ன ஆனது என்று அறியும் ஆவலா? இலங்கை ராணுவம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கவா? இது எல்லாம் சேர்ந்தா இல்லை ஒரு வீர சாகச கதையை எதிர் பார்த்தேனா என்று தெரியவில்லை.

ஆனால் ஈழம் குறித்த எழுத்துக்களை வாசிக்க தொடங்கிய பின் இயக்கம் மீது உள்ள விமர்சனங்களின் நியாமும் புரிகிறது. இதை சொன்னதற்கு என் மீது நீங்கள் கல்லெறியும் முன் இயக்கம் குறித்து அன்ரன் பால சிங்கம் என்ன சொன்னார் என்று புத்தகத்தில் ஒரு இடத்தில் தமிழினி சொல்கிறார், அதை வாசித்து விட்டு வாருங்கள்.

தமிழினி இந்திய படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பிறகு இயக்கத்தில் இணைகிறார் 2009ல் போர் முடியும் வரை இயக்கத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். ஆனால் நேரடியாக யுத்தத்தில் கலந்து கொண்ட அனுபவம் மிக குறைவே. அரசியல் பிரிவில் அதிகமும் பணியாற்றியிருக்கிறார்.

சமாதான பேச்சு வார்த்தைக்கு முன்பாக புலிகள் மிக வலுவான நிலையில் இருந்தது தெரிகிறது. ஆனாலும் இழப்புகள் ஏராளம் தான். 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் போராளிகள், தீவிரவாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டு கொள்ள மறுத்ததால் சமாதான பேச்சு வார்த்தை 2006ல் முறிந்த போது புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.

தமிழினி இதற்கு இயக்க தலைவர் புரிந்த எதிர்வினை பற்றி புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை வாசிக்கும் நமக்கு அதில் இருந்தே இயக்கம் தோல்வியை நோக்கி நகர்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் பேசி சாதிக்க வேண்டியதை துப்பாக்கியால் சாதிக்க முயன்றதன் பின்னால் மாண்ட மக்கள் எத்தனை? இதை இயக்க தலைவருக்கு எடுத்துரைக்க ஆட்கள் யாரும் இல்லை. அன்ரன் பாலசிங்கம் தவிர்த்து வேறு எவரும் தலைவர் சொல்லுக்கு மறுப்பேதும் பேசாமல் அவரை சர்வாதிகாரி போல ஆக்கி விட்டனர் என்பது தெரிகிறது.

2006க்கு பின்னர் இருந்த இயக்கம் என்பது ஒரு இயக்கமாக இல்லாமல் ஒரு கட்டு பெட்டி தனமான ராணுவ அமைப்பாக மாறிவிட்டதென்பது புத்தகத்தை வாசிக்கும் போது உணர முடிகிறது. முன்னைய வெற்றிகள் தந்த மிதப்பு நடைமுறையை புரிந்து கொள்ள விடாமல் அவர்களை தடுத்து விட்டது.

கருணா போன்ற போராளிகள் விலகி சென்றது இயக்கத்தை வலுவிழக்க செய்தது. மேலும் ராணுவம் புலிகளின் போர் முறை, ஆயுதம் பொருத்திய இடங்கள், அவர்களின் நிலைகள் என அனைத்தையும் நவீன கருவிகள் மூலமாக கண்டு கொண்டதாக தமிழினி சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை ராணுவ தரப்பில் யாராவது எழுதினால் தான் தெரியும்.

ராணுவத்திடம் சரண் அடைந்து அவர்கள் விடுவிக்கும் வரை சிறை வாழ்க்கையில் தன்னுடைய நம்பிக்கை சிதைந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வரும் தமிழினி, ராணுவம் மற்ற போராளிகளை நடத்திய விதம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.

இலங்கை மீது எந்த புகாரையும் வைக்க வில்லை. ராணுவம் குறித்து மிக குறைவாகவே கூறுகிறார். தன்னுடன் நல்ல விதத்தில் பழகிய சிங்கள அதிகாரிகள் குறித்து நினைவு கூறுகிறார். ஆனால் குற்றம் இழைத்த அதிகாரிகள் குறித்து எதையும் சொல்ல வில்லை.

போர் இறுதி கட்டத்தை நெருங்கிய பின் புலிகள் செய்ததாக தமிழினி சொல்லும் விடயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இயக்கத்தின் தவறுகளை பற்றிய பதிவுகளில்   தயக்கம் இல்லாத போது ராணுவம் குறித்த பதிவுகள் censor செய்ய பட்டது போல் தெரிகிறது.

இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை வந்தே சரண் அடைகிறார். ஆனால் முள்ளிவாய்க்கால் குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது அதை பற்றி மிக குறைவாக கூறி கடந்து செல்கிறார்.

ஜனநாயக தன்மை இல்லாத ஒரு அமைப்பு நாளடைவில் எப்படி நொறுங்கும் என்பது புத்தகத்தை வாசிக்கும் போது தெரிகிறது. தமிழினம் அனுபவித்த இந்த பெருந்துயருக்கு இயக்கத்தில் ஜனநாயக தன்மை இல்லாதது முக்கிய காரணம்.

இயக்கத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள் அல்லது ஈழ சமூகத்தில் நிலவிய வேறுபாடுகள் குறித்து ஒன்றும் அறிய முடியவில்லை. ஷோபா சக்தி, சயந்தன் எழுத்துக்களில் இயக்கம் மற்றும் சமூகத்தில் நிலவிய சாதிய படிநிலைகள் சரிந்து விடாமல் இருக்க மக்கள் செய்யும் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புத்தகம் மீதும், தமிழினி மீதும் பெரும்பாலும் எதிர் மறையான விமர்சனங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சுய சரிதை நிச்சியம் முக்கியமான ஆக்கம்.  புலிகள் தரப்பு குறித்தும், அமைப்பு உருவாகிய பின் ஈழ மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விமர்சனத்தோடு பலரும் எழுதும் போது நாம் இன்னும் இந்த போராட்டத்தை பற்றி புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். போலவே இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய மனசாட்சி உள்ள ஆட்களை வைத்து அவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

ஆமாம் சரத் பொன்சேகா என்ன ஆனார்?! இறுதி யுத்தத்தில் நடந்ததை அவர் வெளிய சொல்லி விடுவார் என்று தான் அவரை சிறையில் அடைத்தவர் ராஜ பக்ச?

ராஜீவ் கொலை குறித்தும், அதற்காக சிறை வைக்க பட்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி குறித்தும் தமிழினி ஒன்றும் சொல்ல வில்லை. மேலும் ராஜீவ் கொலைக்கு புலிகள் இயக்கம் பொறுப்பேற்று கொண்டதா என்ன?

தமிழினியின் சுய சரிதையில் இதையெல்லாம் தேடக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இயக்கத்தில் பெண்களுக்கு கொடுக்க பட்ட பொறுப்புகள், அவர்களை தலைவர் நடத்திய விதம் பற்றி நிறைய தகவல்களை தருகிறார். ஆனாலும் இயக்கத்தில் இருந்த முக்கியத்துவம் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு இல்லாமல் போனதையும், போர் முடிந்து எஞ்சிய பெண்போராளிகள் அனுபவித்த துன்பத்தையும், சமூகம் அவர்களை நடத்திய விதத்தையும் சொல்கிறார். பெண்கள் சமாதான பேச்சு வார்த்தையில் அதிகமாக பங்கெடுக்கும் போது சுமூகமான தீர்வுகள் சீக்கிரமே எட்டப்படும் என்றும் நினைக்கிறார்.

இந்த சுய சரிதையை அனைத்து தமிழ் பெண்களும் வாசிக்க வேண்டும். தமிழ் இளைஞங்கர்களும் தான். புத்தியை தீட்டுவதை விட்டு விட்டு எல்லா வெட்டி வேலையும் செய்வதில் நிபுணர்கள் ஆகி கொண்டிருக்கும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் என்றால் வாக்களிப்பது மட்டுமே என்றும் அதையும் செய்ய தேவை இல்லை என்றும் நினைக்க ஆரம்பித்து விட்ட ஒரு தலைமுறை.

தமிழக மக்கள், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு அற்றவர்கள் என்பது இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு வசதியாக போய் விட்டது. ஈழத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து விட்டனர். இங்குள்ள அரசியல் தலைவர்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன என்பதும் விரிவாக எழுதப்பட வேண்டும்.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் யூதர்கள் தங்களை ஒரு சக்தி மிகுந்த சமூகமாக உருவாக்கி கொண்டனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை இலக்கியத்தில் பதிவு செய்தனர், திரைப்படங்கள் ஆக்கினர். இன்று வருடத்திற்கு ஒரு படமாவது போரில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து வருகிறது. இந்த இலக்கிய கலாச்சார பின்புலம் அவர்களை சர்வதேச அரங்கில் வலிமையுடைய மக்களாக நிறுவி இருக்கிறது.

தமிழினத்திற்கு இலக்கிய கலாச்சார பின்புலத்திற்கு ஒரு குறைவும் இல்லையென்றாலும் ஈழம் குறித்த எழுத்துக்கள் தமிழ்  மக்களிடமும் (தன் மொழியில் தற்காலத்தில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் அறியாத அப்பாவி இனம் தமிழினம்) மொழிபெயர்த்து உலக வாசகர்களிடமும் எடுத்து செல்ல பட வேண்டும். விமர்சிக்க பட வேண்டும். விமர்சனம் செய்து மேலும் முன்னகர வேண்டும். தமிழ் மொழிக்கான இருக்கைகளை சர்வேதச பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த வேண்டும். ஒரு அறிவு சார்ந்த, பொருளியல் சக்தியாக தமிழ் மக்கள் எழுந்து நிற்கும் போது நமக்குறியதை யாரும் மறுக்க முடியாது.

பின் குறிப்பு:

அங்கங்க ரெம்ப உணர்ச்சி வச படுற மாதிரி தெரிஞ்சா அது தான் தமிழ் பேசும் மக்களை வாழ வைக்குது இல்லாட்டி லத்தீன், கிரேக்க கலாச்சாரத்துல தமிழும் சேர்ந்திருக்கும்.

Monday, 7 November 2016

இலக்கியத்தில் ஏடு தொடங்குதல்...


தமிழ் நாட்டில் இலக்கியம் என்றால் சங்க இலக்கியம் என்றே பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் புரிதலிருக்கிறது. அவர்களிடம் 'உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்' என்ற கேள்வி ஒரு வித நகைப்பை தான் உருவாக்கும். நீங்கள் ஒரு வித தற்கொலை தன்மையுடன் உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டால், வள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி என்று சொல்லுவார்கள். சரி தான், இப்போ எழுதுற யார் பெயராவது தெரியுமா என்று கேட்டால், கலைஞர், கண்ணதாசன், வைரமுத்து, ராஜேஷ் குமார் என்று சொல்வார்கள்.

மனப்பாட போட்டிக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து படிக்கும் அவர்கள் செய்தி தாள்களை கூட படிப்பதில்லை. ஏன் செய்தி தாள் கூட வாங்குவதில்லை, படிப்பதில்லை என்ற கேள்விக்கு அதான் டிவில நியூஸ் வருதே என்று வேகமான மறுமொழி வரும். இப்படி இருக்கும் நிலைமையில், கடைசியா நீங்க என்ன புத்தகம் வாங்குனீங்க, படிச்சீங்க என்ற கேள்வி மிக அபத்தமான ஒன்று.

ஆனாலும் கடந்த பத்து வருடங்களாக கல்லூரிகளில் தமிழ், ஆங்கில இலக்கிய படிப்புகள் நிரம்பி வழிகின்றன. நீங்கள் தமிழ், ஆங்கில இலக்கிய மாணவ, பேராசிரியர்களிடம் மேற்கண்ட கேள்விகளை கேட்டாலும் மேற்கிடைத்த பதில் தான் கிடைக்கும். ஆங்கில இலக்கியம் படிக்க வருபவர்கள் பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க என்பதில் இருந்து வெளிநாட்டில் இருக்கும் சித்தப்பா சொன்னார் என்று பலரும் சொன்னதாக வந்து சேர்வார்கள். அனைவர் சொன்னதும் இளங்கலை படித்து விட்டு B.Ed படித்தால் வேலை உறுதி என்பதே.

தமிழ் வழி படித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன என்பது தான் தமிழ் இலக்கிய வகுப்பை நிறைய வைக்கிறது. TNPSC தொடங்கி UPSC வரை மனதில் கட்டம் கட்டி படிக்க வருபவர்கள் பலர்.

நிலைமை இப்படி இருக்கும் போது இலக்கியம் படிக்க வருபவர்களிடம் கடைசியா என்ன படிச்சீங்க என்று கேட்டால் அவன் சிரிக்காமல் என்ன செய்வான்??!!!

12ம் வகுப்பு தமிழ் துணை பாட நூலில் உள்ள கதைகள், எழுதியவர் பெயர் கேட்டால் அதெல்லாம் நினைவில் இருப்பதில்லை. அதன் தேவை முடிந்து விட்டதால் மறக்கப்பட்டு விட்டது. புதுமைப்பித்தன் கதை எப்படியும் இருக்கும் என்று அவர் எழுதிய கதையை பற்றி கேட்டால் ஆமாம் என்று பதில் வரும். கதையை வாசித்தவர்கள் அந்த வருடம் கல்லூரியில் நுழைந்த 500 முதலாமாண்டு மாணவர்களில் 10 பேர் இருந்தால் அதிகம்.

ஏன் வாசிக்கவில்லை?! ஆசிரியர் கதையை சொல்லுவார், கட்டுரை எழுத கோனார் உரை - பிறகெதுக்கு தங்களது பொன்னான நேரத்தை கதையை வாசிப்பதில் செலவு செய்ய வேண்டும்?! புதுமைப்பித்தனின் 'பால்வண்ணம் பிள்ளை' பரிந்துரைக்கப்பட்ட கதை.  4 பக்கம் கூட வராது. அதை வாசிக்க வக்கில்லாதவர்கள் கல்லூரி வரை வந்து விட்டார்கள். அதுவும் இலக்கிய வகுப்புக்கு.

தமிழில் ஒரு நாவலை கூட வாசிக்காமல் தமிழ் ஆசிரியர் ஆகி விட முடியும்; உபயம் - உரை நூல்கள். ஆங்கிலத்திற்கும் அவ்வண்ணமே.

இது ஏன் இப்படி நடக்கிறது?!

தமிழ் சமூகத்திற்கு கல்வி என்பது வேலைக்கான துருப்புச்சீட்டு.  வேறெதையும் வாசிப்பது மகா பாவம். ஆனால் இந்த சமூகம் எடுத்ததுக்குகெல்லாம் கல் தோன்றி, மண் தோன்றி என்று பிதற்றும். நிலைமை இப்படி இருக்கும் போது ஆங்கிலம் படிக்க வருப்பவனிடம் Social History of England, History of English Literature, Literary Forms, Chaucer, Shakespeare, phonetics என்றால் அவன் என்ன செய்வான்?!

தமிழிலும் இதே நிலவரம் என்று நினைக்கிறேன். தமிழ் சிறுகதை, நாவல்கள் வாசித்த, வாசிக்கும் ஒரு பள்ளி, கல்லூரி தமிழ் ஆசிரியரை நான் சந்திக்க காத்து கொண்டிருக்கிறேன்.

இப்படி தமிழனுக்கு தமிழ் எழுத்து உலகம் குறித்து எதுவுமே தெரியாத போது, பள்ளியில் இலக்கியத்தை அறிமுக படுத்தாமல் விட்டு விட்டு, வீடுகளில் பிறந்ததில் இருந்து டிவி பார்த்து வளர்ந்து இப்போது இணைய அடி தடிகளில் இறங்கும் இளைய தலைமுறையிடம் இலக்கியத்தை எப்படி அறிமுக படுத்த முடியும்?!

இது அவசியம் தானா?!

பாரதியார் பிறந்த நாளுக்கு நமது பிள்ளைகளுக்கு பாரதியார் வேசம் கட்டுபவர்கள் நாம். எட்டயபுர மாணவர்கள் ஒருவரிடம் கூட பாரதியார் கவிதை புத்தகம் கிடையாது என்பது அதிர்ச்சி அடைய வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் திருநெல்வேலியில் இருந்து கொண்டு அல்வா சாப்பிடாமல் இருப்பது கண்டிக்க பட வேண்டிய செயல் இல்லையா?!

இனி வரும் வருடங்களில் இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அப்துல் கலாம் வேசம் போடுவார்கள்.

எதற்காக இலக்கியம் படிக்க வேண்டும்?! என்ற கேள்வி மிக விரைவாக வந்து விழும். நாம் பதிலுக்கு எதுக்காக பொறியியல், மருத்துவம் என்று ஆரம்பிக்க கூடாது. வயிற்று வாதிகள் அசிங்கத்திற்கு அஞ்சாதவர்கள்.

எதற்காக ஒரு நாளைக்கு 5 மணி  நேரம் டிவி பார்க்க வேண்டும்?! மாசம் 250 ரூபாய்க்கு net card போட்டு fb, whatsapp, hike, instagram என்று நாள் ஒன்றுக்கு விழித்திருக்கும் நேரம் முழுதும் இணையத்தில் வாழ வேண்டும்? என்று பதில் கேள்வி எழுப்ப வேண்டும்.

எப்போதும் இந்த மாதிரி கேள்விக்கான பதில் இன்னொரு கேள்வியிலேயே இருக்க முடியும். யாரும் சொல்லி தராமலேயே சராசரி கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் சினிமா சமாசாரம் எல்லாம் தெரிகிறது!!! ஆனா இலக்கியம்?!

வேறெதுவும் கிடைக்காமல் அல்லது வேலையை மட்டுமே மனதில் வைத்து வந்து தமிழ், ஆங்கில இலக்கியம் படித்து ஆசிரியர் ஆனவர்கள் தான் தமிழ் நாட்டில் இப்படியொரு இலக்கிய வாசிப்பு இல்லாமல் செய்தது. அவர்களே படிக்காத போது மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?!

இந்நிலையில் எதன் பொருட்டு மாணவனை இலக்கியம் வாசிக்க வைப்பது?! கல்லூரியில் படிக்கும் ஆயிரம் பேரை வாசிக்க வைக்க முடியுமா?! ஆனால் தமிழில் இலக்கியம் என்ற ஒன்று இன்னும் எழுத படுகிறது என்பதை சொல்ல முடியும். அந்தந்த ஊர்களில் உள்ள எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்து வைக்க முடியும். வாசிப்பது அவரவர் விருப்பம்.

நான் புதிதாக செல்லும் அனைத்து வகுப்புகளிலும் கி. ராஜநாராயணன் எழுதி தொகுத்த நாட்டு புற கதைகளில் இருந்து நாளுக்கு ஒன்று என்று முதல் மூன்று நாட்கள் கதைகளை சொல்லுவேன். பின்னர் நாஞ்சில் நாடனின் தன் ராம் சிங், எஸ். ராமகிருஷ்ணனின் குதிரைகள் பேச மறுக்கின்றன, ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு, மாடன் மோட்சம், சுஜாதாவின் நகரம், அ. முத்துலிங்கத்தின் கோப்பைகள் என்று முதல் 10 வகுப்புகளில் கடைசி 15 நிமிடத்தை கதை சொல்ல பயன் படுத்துவேன்.

கதையை கூர்ந்து கவனிக்காத ஆள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சினிமா நடிகரின் விசிறியாக இருப்பார். அவர்களுக்கு எதுவும் ஏறாது. மற்ற படி அனைவரும் தினம் என்ன நாள் முழுதும் கதை கேட்க தயாராகவே இருப்பர்.

பின்னர் நான் சொன்ன கதைகளை print out எடுத்து வாசித்து பாருங்கள் என்று கொடுக்கும் போது தான் எத்தனை பேர் உண்மையில் வாசிக்க விரும்புகின்றனர் என்று தெரியும். என்னடா ஆங்கிலம் படிக்க வந்த இடத்தில் தமிழ் வாசிக்க சொல்கிறான் இந்த ஆள் என்று மண்டையை குழப்புகிறவர்கள் அனேகம்.

சரி இதை ஏன் செய்ய வேண்டும்?!

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, உலக சினிமாக்களை ஆராய்ச்சி செய்கிறோம், Oscar விருது குறித்து மாய்ந்து மாய்ந்து பேசுகிறோம், அமெரிக்கா தேர்தல் குறித்தெல்லாம் கவலை படுகிறோம். அப்படி இருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் இலக்கியம் வாசிப்பது அப்படி ஒண்ணும் பாவமான, இழிவான செயல் இல்லையே!!! மேலும் தமிழில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் தெரியாத நாம் எப்படி உலக ஞானத்தை உள் வாங்கி கொள்வோம்.?!

தாய்மொழி வழிக் கல்வி தான் சிறந்தது என்று பேசுபவர்கள் எவரும் ஒரு நாளும் தமிழ் மொழியில் கடந்த 100 வருடங்களாக எழுத பட்டு வரும் எது குறித்தும் வாய் திறந்து பேசுவதில்லை. அவர்கள் வெறும் அரசியல் கூலிகள் தானே!!??

நான் என் மாணவர்களிடம் முதலில் உள்ளூர் எழுத்தாளர் நாலு பேரையாவது வாசியுங்கள் பின்னர் ஆங்கிலத்தில் எங்கிருந்து தொடங்குவது என்று சொல்கிறேன் என்று சொல்லுவேன்.

இலக்கியத்தில் ஏடு தொடங்குதல்...

நான் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் சேர்ந்து விட்டு ஒரு நோக்கமில்லாமல் சுத்தி கொண்டிருந்த போது என்னுடைய senior ஒருவர் நூலகத்திற்கு அழைத்து சென்று Paulo Coelho எழுதிய The Alchemist புத்தகத்தை எடுத்து தந்து வாசிக்க சொன்னார். புத்தகம் சுவாரசியமாக இருக்கவே மூன்று நாளில் படித்து விட்டேன். பின்னர் இவன் தான் பாலா, Jeffery Archer கதைகள் என்று எடுத்து தந்தார். அதில் இருந்து நானே தேடி வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இங்கே The Alchemist என்றால் பையன் நம்மை சந்திப்பதை தவிர்த்து விடுவான். அதனால் இவன்  தான் பாலாவில் இருந்து தொடங்குவது. நமக்கு எதுவும் சினிமாவாக இருக்க வேண்டும். சினிமா ஆளின் புத்தகத்தை படிக்க திராணியற்றவர்களும் உண்டு. அவர்கள் விதி படி நடக்கட்டும்.

பின்னர் ஜெயமோகனின் பனி மனிதன், கி. ராவின் கோபல்ல கிராமம், அ. முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு என்று வாசிக்க சுவாரசியமான ஆனால் இலக்கிய தரம் மிகுந்த புத்தகங்களை குடுத்து அவர்கள் வாசித்து விட்டால் பின்னர் அவர்களுடைய பாதையை அவர்களே கண்டடைந்து விடுவார்கள்.

இதனால என்ன பயன்?! இது உனக்கு சோறு போடுமா?! என்று Practical ஆன ஆட்கள் கேட்பார்கள்.

அவர்கள் கேள்வி 100% சரி. பாரதியார், புதுமைப்பித்தன் தொடங்கி இன்றும் தமிழ் கவிஞர், எழுத்தாளர் யாரும் வாழ்வாங்கு வாழ்ந்து விடவில்லை. எழுதுபவன் பிச்சை எடுக்கும் நிலைமையில் இருக்கும் போது வாசிப்பவன் குறித்து கவலை எழவே செய்யும்.

அவர்களிடம் நீங்கள் பார்க்க தான் வாரம் நாலு சினிமா வெளியாகிறது. IPL,TV சீரியல், Dubbing சீரியல், திரைப்படம், திரையிசை பாடல் சேனல் எல்லாம் இருக்கிறது. உண்டு , உழைத்து, உறங்கிய நேரம் போக ஆக்க பூர்வமாக tv பாருங்கள் என்று சொல்லி அவர்கள் கைப்பேசி எண்ணை நமது கைப்பேசியில் இருந்து அழித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

வாசிப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான். தமிழ் சூழலில் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஒரு இடம் கிடைப்பது பாலைவனத்தில் நீர் ஊற்றை காண்பது போல அரிதானது. வாசிப்பவர்களிடம் வாசிப்பை ஒரு hobby யாக தொடருங்கள். TV, சினிமாவிற்கு செலவு செய்யும் பணத்தை, நேரத்தை புத்தகம் வாங்க, வாசிக்க செலவு செய்யுங்கள். அப்படி செய்யும் போது தமிழ் மொழியின் மரணத்தை நீங்கள் தள்ளி போடுகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.

செம்மொழி, இரண்டாயிரம் வருட பாராம்பரியம் மிக்க மொழி, இலக்கிய வளம் நிறைந்த மொழி என்று மேடையில் உளறினால் ஆச்சா?! தமிழுக்காக என்ன செய்தோம்?!