Tuesday, 13 September 2016

Wolf Totem (Film) - புல்வெளி தேசம்



மனிதன் நினைவில் காடுள்ள மிருகம் என்று ஒரு கவிதை தொடங்கவோ முடியவோ செய்யும்.

காட்டில் இருந்து இன்று முதலாளித்துவ காலம் வரை மனித இனம் கடந்து வந்த தூரம் வரலாற்று புத்தகங்கள் படித்து அறிந்து கொள்ள கூடியது அல்ல.

இந்த பயணத்தில் நாம் எண்ணற்ற பறவைகளை, விலங்குகளை வீட்டோடு வைத்து பழக்க படுத்தி அவை நம் சொல் கேட்டு நடக்கும் அளவுக்கு செய்து இருக்கிறோம்.

ஆனால் சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்களை அது போல செய்யமுடியவில்லை. சில பணக்கார அசடுகள் வீட்டில் வளர்த்து இருக்கலாம். ஆனால் அவைகளை நாம் கோழி, ஆடு, நாய், பூனை, மாடு போல வளர்த்து விட முடியாது. யானையை கூட நாம் tame செய்து தான் வைத்து இருக்கிறோம். அதனால் தான் அவை அவ்வப்போது மதம் கொள்கின்றன. (படிக்க; ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர்) யானை உட்பட சிங்கம், புலி போன்ற விலங்குகள் circus ல் perform செய்வதை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆனால் எப்போதாவது ஒரு ஓநாய் எங்காவது வித்தை காட்டி பார்த்து இருக்கிறீர்களா?!!

Wolf Totem படம் சீனாவில் மாசேதுங் தலைமையில் நடைபெற்ற கலாச்சார புரட்சி தொடங்கிய இரண்டாம் ஆண்டு வாக்கில் தொடங்கி அடுத்த
 சில வருடங்கள் அதனால் ஒரு மங்கோலிய பழங்குடி இன மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்கிறது. அந்த மக்களின் மனசாட்சியாக இருக்கும் ஓநாய் இனத்திற்கு என்ன ஆனது என்று விவரிக்கிறது.

நாவல்கள் படம் ஆகும் போது நாவலில் இருக்கும் ஏதோ ஒன்று படத்தில் இல்லை என்று விமர்சனம் வரும். இந்த படத்திற்கு அப்படி என்ன விமர்சனம் வந்தது என்று தெரியவில்லை. படம் கச்சிதமாக இருந்தது. நாவல் காடு என்றால் திரைப்படம் என்பது மனிதன் உருவாக்கும் பூங்கா போன்றது. எனினும் சில படங்கள் புத்தகம் படித்த அளவுக்கு ஒரு அபாரமான மன எழுச்சியை குடுக்கும். Into The Wild, The Straight Story, JFK, Saving Private Ryan, Apocalypse Now போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

Wolf Totem சம கால சீன இலக்கியத்தின் மீது உலகின் பார்வையை பதிய வைத்த நாவல். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். நாவலை எழுதியவர் தனது உண்மையான அடையாளத்தை மிக தாமதமாகவே வெளியிட்டார். தனது பொருட்களை உலக நாடுகள் முழுதும் கொண்டு விற்கும் சீனா இந்த படத்தை பற்றி மூச்சு விட்டதாக தெரியவில்லை. The Jungle Book போன்ற படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவெங்கும் வெளியாகும் போது இப்படி ஒரு படம் வந்த விவரம் இங்கே தெரியவேவில்லை. பெரிய மால்களில் உள்ள திரையில் வெளியிட்ட மாதிரியும் நினைவில்லை.

சீன பிரெஞ்சு கூட்டு தயாரிப்பு என்றபோதும் படம் சீனாவை மிக மேலோட்டமாகவாது விமர்சனம் செய்கிறது. அவதார் படத்துடன் இணைத்து பார்க்க வேண்டிய அளவிற்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால் இங்கே graphics சித்து வேலை எல்லாம் கிடையாது.

படம் இயற்கை, தத்துவம், அரசியல், வாழ்க்கை முறை, சுற்றுப்புறம் என்று பல விஷயங்களை பேசுகிறது.

Chen மற்றும் Yank ke என்ற இரண்டு மாணவர்கள் நகரத்தில் இருந்து மங்கோலிய பழங்குடி மக்கள் வசிக்கும் ஊருக்கு பாடம் சொல்லி குடுக்க வருகிறார்கள். இனக்குழு தலைவர் அவர்களின் பெட்டியை சோதித்து விட்டு தங்க அனுமதிக்கிறார். அவரின் குடிசைக்கு வெளியே கொடிகம்பத்தில் ஓநாயின் தோல் பறந்து கொண்டு இருக்கிறது.

தலைவர் அவர்களை அழைத்து சென்று அவர்கள் தங்க வேண்டிய இடத்தை காட்டி விட்டு ஆளுக்கு ஒரு லத்தி தருகிறார். அது நம்மூரில் பயன்படுத்தும் லத்தியை போல இரண்டு மடங்கு தண்டியாக இருக்கிறது. அதன் நுனியில் இருந்து மேல் நோக்கி ஒரு அடி நீளத்திற்கு திடமான கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது. அது எதற்கு என்று கட்டுரை முடியும் போது சொல்கிறேன். இல்லை நீங்களே படத்தை பார்த்து யூகித்து கொண்டாலும் மகிழ்ச்சி தான்.

ஓவியம் போல தெரியும் மாலை வானம். நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுவது போல பெய்யும் பனி. பச்சை புல்வெளி, அதில் அமைந்து இருக்கும் அவர்களின் கூடாரம் என்று படம் பார்ப்பதற்கு கண்ணுக்கு இனிமையானதாக இருக்கிறது. Bird's eye view என்பது போல wolf's eye view வில் பல காட்சிகள் உண்டு. ஓநாய்கள் மான்களை விரட்டும் போது இதயம் வேகமாக துடிப்பது போன்ற பின்னணி இசை படபடப்பை கடத்துகிறது.

ஓநாய்கள் இல்லாமல் தங்கள் நிலத்தின் சமன்பாடு குலைந்து விடும் என்று தலைவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஆனால் உற்பத்தியை பெருக்குகிறேன் பேர்வழி என்று அழிவை நோக்கி அரசாங்கம் அப்பழங்குடி மக்களை இழுத்து சொல்கிறது. இந்தியாவில் வளர்ச்சி என்று நாம் எந்த திசை நோக்கி ஓடுகிறோம் என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

Tengger என்று தங்கள் கடவுளை பயபக்தியுடன் நினைத்து கொள்கிறார்கள். Tenggeriன் விருப்பப்படி நடக்கட்டும் என்று தங்களுக்கு நடக்கும் துன்பங்கள் குறித்து சமாதானம் கொள்கிறார்கள்.

படங்களில் பேசப்படும் வசனத்தை வைத்து படத்தை பற்றி யூகிப்பது நமது கற்பனையை, சிந்தனையை ஒரு படியாவது முன்னகர்த்தும். இந்த பதிவில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை மேற்கோள் தருகிறேன். அதை படித்த பின் ஏற்படும் எதிர்பார்ப்பு நிச்சியம் உங்களை இந்த படத்தை பார்க்க வைக்கும் என்று நம்புகிறேன்.

(ஓநாய்களை பயமுறுத்தவம் தாக்கவும் தான் அந்த லத்தி என்றாலும் அவைகள் மீது விழும் அடி அதன் எலும்புகளை நொறுக்கி விட கூடாது என்று தான் லத்தியின் நுனியில் கயிறு கட்டியிருக்கிறார்கள்.)

இனக்குழு தலைவர்:

"His dream was to be free as the wolves."

"Genghis Khan defeated the armies of the world by studying the wolves."

"What are they waiting for? They have been waiting for this moment for months. The desire to kill tortures them. But they are not going to waste it because of haste. Wolves are smart and organized. They work together and obey their leaders decision. More than anything else they have patience. Life is about choosing the moment. Wolves and Mongols understand that."


"The problem for us Mongols  is that our history wasn’t written by us but mostly by our enemies."

"What is left is wolves share."

"You captured a god to turn it into  a slave."

Chen Zen:

"Capture the cub to study it."

"Chairman Mao says Study your enemy to defeat him."

Smuggler:

"To make fur clothes and things for foreign ladies."

பழங்குடிகளுக்கான அரசு அதிகாரி:

"You are here to pass on your knowledge and change these primitives."

"Being a leader is not about being liked. Sometimes you have to obey orders that your heart resents."

தற்போதைய தமிழகத்தில் மீனவ மக்கள் படும் துயரத்திற்கு அவர்களில் பேராசை பிடித்த சிலர் சக்தி மிகுந்த படகு மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வலைகளை வைத்து கடலை அரித்து மீன் பிடிப்பது தான் காரணம். இது போல உலகமெங்கும் உள்ள பழங்குடி இன மக்கள் தங்கள் வாழ்வியலை தொலைத்ததற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்து கொள்ள இந்த படம் ஒரு திறப்பை அளிக்கும்.

பின் குறிப்பு:

படத்தின் கதையை சுருக்கமாக தருவது, படத்தை பற்றிய அதிகமான தகவல்கள் படத்தை பார்க்கும் போது சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் அவைகளை தவிர்த்து விட்டு படம் பேசும் அரசியலை முன் வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு உள்ளது.

Wolf Totem நாவல் ஓநாய் குலச்சின்னம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப் பட்டுள்ளது. சி. மோகன் மொழிபெயர்க்க அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயக்குனர் வெற்றி மாறன் இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றே இந்த பதிபகத்தை தொடங்கினாராம்.

லத்தியில் கயிறு கட்டப்படுவதற்கான காரணத்தை கட்டுரையின் நடுவிலே எழுதி விட்டேன். ;-)

Bibliography:

1. Jared Diamond: Guns, Germs and Steel

2. Desmond Morris: The Naked Ape

3. ஜோ டி குரூஸ் - ஆழி சூழ் உலகு.

4. Jiang Rong - Wolf Totem

For More Details - http://www.imdb.com/title/tt2909116/?ref_=nv_sr_1

Saturday, 3 September 2016

Bullhead - Boyhood to Beasthood



"Sometimes things happen in life that turns everybody silent. So silent that nobody dares to talk about it anymore. To no one. Not even themselves. Not in their own head, not aloud, not a fucking word. Because everything has been lingering. There deep in those in fields, year after year. But out of the blue it is all back. Just like that, from one day to another. It may be ever so long ago, there is always someone who digs it up again. Whatever you do, and whatever you think, one thing you can be sure of: you’re always fucked. Now, tomorrow, next week and next year, until the end of time. Fucked."

என்ற voice over உடன் படம் துவங்குகிறது. இதை தமிழில் மொழி பெயர்த்தால் குழப்பமே எஞ்சும். ஏற்கனவே Flemish மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதை மேலும் மொழி பெயர்ப்பது துல்லியமாக இருக்காது.

முதல் காட்சியில் கதா நாயகன் மல்யுத்த வீரனை போன்ற உடற்கட்டுடன் ஒரு SUV வண்டியில் வந்திறங்கி ஒரு மாட்டு பண்ணை உரிமையாளரை அடித்து மிரட்டுகிறான்.

நம்மூரில் ஆட்டு சந்தையில் ஆட்டின் எடையை கூட்ட புனல் வைத்து தண்ணீர் புகட்டுவது போல இந்த Belgium நாட்டு திரைப்படமான Bullheadல் மாட்டின் எடையை அதிகரிக்க பல்வேறு hormone injections செலுத்துகின்றனர்.

இந்த hormone injection சந்தையின் பின்புலத்தில் இயங்குபவர்கள், அதை தடுக்க முயலும் காவல் துறை அதிகாரிகள், Gangல் இருந்து கொண்டு informer வேலை செய்பவர்கள் தான் இப்படத்தின் கதா பாத்திரங்கள்.

இங்கே கதா நாயகன் ஒரு troubled individual என்பது ஒரு சில நிமிடங்களில் தெளிவு படுத்த படுகிறது. (Voice overயை மறுபடி வாசிக்கவும்) Submarino போல இதுவும் ஒரு மனிதன் தனது கடந்த கால துன்பியல் நிகழ்வு ஒன்றில் இருந்து வெளியேற துடிக்கும் கதையே.

என்னதான் ஐரோப்பிய யூனியன் என்று மார் தட்டி கொண்டாலும் அவர்களுக்குள்ளே வந்தேறிகள் என்ற சண்டை அனேகம் உண்டு போல, Belgium, French, Flemish என்று பல மொழி பேசும் கதா பாத்திரங்கள் என்று நகரும் படத்தில் நாம் ஹிந்தி பேசுபவனை வில்லன், காமெடியன் ஆக்குவது போல இப்படத்தில் இரண்டு கதா பாத்திரங்கள் உண்டு.

கதா நாயகன் Jacky தனது உறவினர் ஒருவருடன் தொழில் பேச செல்லும் இடத்தில தனது பால்ய கால நண்பனான Diedrikகை சந்திக்கிறான். இருவருக்கிடையே இருக்கும் estrangement எதனால் என்பது flash back மூலமாக தெரிய படுத்த படுகிறது.

Graphic Violence பார்த்து பழக்கம் இல்லாதவர்கள் flash back காட்சிக்கு பிறகு படத்தை தொடர்வார்களா என்பது சந்தேகமே!!!

Jacky மீதே கவனம் குவியும் படத்தில் அவனின் செயல்கள் அத்தனையும் காட்சிகளாக விரிகின்றன.

தன்னை பலமான ஆணாக காட்டி கொள்வதற்காக hormonal injections பயன்படுத்தி உடம்பை ஏற்றியதோடு இல்லாமல் manly ஆன after shave lotion வாங்க கடைக்கு போகிறான். அந்த கடையின் முதலாளியான பெண் இவனுடைய கடந்த காலத்துடன் சம்மந்த பட்டவள் என்பது அந்த காட்சி தொடங்கிய சில நொடிகளில் நம்மால் உணர்ந்து விட முடிகிறது. அந்த பெண்ணும் அவனை அடையாளம் கண்டு கொள்கிறாள்.

இங்கே கொஞ்சம் தமிழ் சினிமா வாசம் என்று பார்த்தால் உலகம் முழுக்க இளம் வயதில் ஆசைப்பட்ட பெண்ணை 20 வருடம் கழித்து சந்தித்தாலும் அந்த முதல் ஈர்ப்பை கடப்பது கஷ்டம் தான் போல.

இது வரை சமூகத்துடன் இணக்கமாக இல்லாமல் வாழ்ந்து வந்த Jacky அந்த பெண்ணுடன் நட்பு கொள்ள முயற்சிக்கிறான். அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அந்த பெண்ணுடன் நடன விடுதிக்கு வந்த இன்னொரு நபரை கோமாவிற்கு போகும் அளவுக்கு தாக்கி விடுகிறான்.

Bull in a china shop என்று ஆங்கிலத்தில் ஒரு idiom உண்டு. Jacky அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்கிறான். அவனுக்கு அவன் தொழில் தவிர்த்து சொந்த வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. அவனுடன் மனம் விட்டு பேச ஒரு உறவோ, நட்போ இல்லை. இது தான் அவன் அவனுடைய வாழ்க்கையின் திசையை மாற்றி விடுகிறது.

படத்தை பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அது என்ன அப்படி யாருடனும் பேச முடியாத அளவுக்கு பிரச்சினை அவனுக்கு வந்தது என்று. Amores Perros மற்றும் ஆடுகளம் போன்ற படங்களில் நாய் மற்றும் சேவல்களுடன் பழகும் படத்தின் பிரதான கதா பாத்திரங்கள் அந்த வளர்ப்பு பிராணிகளின் குண நலன்களை பிரதி பலிக்கிறார்கள். நாய் போல விசுவாசம் வைக்கிறார்கள் பின்னர் ஏமாந்து போகிறார்கள். சேவல் போல கொக்கரிக்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் முரட்டுத்தனமாக தாக்கி கொள்கிறார்கள்.

இங்கே Jacky ஒரு காளை மாட்டை நினைவுபடுத்தும் உடல் மொழியுடன் திரையை நிறைக்கிறான். என்ன பேசுவது என்று தெரியாமல் தரையை பார்த்தவாறே யோசித்து யோசித்து பேசுகிறான். அவனுக்கு பிடித்த பெண்ணிடம் பேச மிகவும் வெட்கப்படுகிறான்.

நாம் நன்கு அறிந்த Hollywood அல்லது இந்திய சினிமாவில் சிறு வயதில் ஏதோ ஒரு அசம்பாவிதத்தால் பாதிக்கப்படும் கதா நாயகன் Batman, அந்நியன் என்று super hero ஆகி விடுவான். ஆனால் ஐரோப்பிய சினிமாவில் கவனம் முழுவதும் அந்த தனி நபருக்கும் சமூகத்திற்குமான முரண் பாடுகளால் விவரிக்கப்படுகிறது.

400 Blows திரைப்படம் ஒரு உதாரணம். இங்கே பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு என்று ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை முறையில் Jacky போல இளவயதில் குரூரமான வன்முறைக்கு ஆளாகும் மனிதன் தனித்து விடப்பட்ட விலங்கு போல ஆகி விடுகிறான். இந்த புறவயமான அமைப்பு ஒரு மனிதனின் மனக்காயங்களை ஆற்ற வழியின்றி இருக்கிறது. Jacky சமூகத்தில் ஒருவனாக வாழ்வதற்கான அத்தனை வழிகளும் அடைக்கப்பட, அவனுக்கு எது விடுதலை அளிக்கும் என்று நினைக்கிறோமோ அதுவே நடக்கிறது.

இயக்குனரின் பெயர், நடிகர்களின் பெயர் என்று இந்த கட்டுரையில் எதையும் சேர்க்கவில்லை. Bullhead cast&crew குறித்து நீங்கள் மேலும் தேடி படிக்கும் அளவுக்கு இது ஒரு முக்கியமான படம் என்பதை மட்டும் இங்கே சொல்கிறேன்.

For More Details - http://www.imdb.com/title/tt1821593/?ref_=nv_sr_1

Saturday, 20 August 2016

எந்திரமாதல்!!!



எந்திரமயம் இல்ல எந்திரமாதல்.

'இராணுவ ஒழுங்கு' என்கிற பதம் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவர்கள் தான் சர்வாதிகார ஆட்சி வர வேண்டும், புரட்சி வர வேண்டும், Hitler பெருமைகள் எல்லாம் பேசுபவர்கள்.

இராணுவத்தில் பணிபுரிபவர்கள் விடுமுறையில் வரும் போது 'bottle' கேட்டு முதல் ஆளாக நின்று தேச பக்தியை 'prove' செய்வார்கள்.

இது BJP அரசாங்கம் வந்த பிறகு என்று அல்ல எப்போதும் மக்கள் மனதில் இந்த சர்வாதிகார ஆசை ஊறிக்கொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் சர்வாதிகாரம் இருக்கிறது. 'அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா' என்று அம்மாக்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருப்பார்கள். இப்படி வீடுகளில் உள்ள பையன், பெண்கள் தான் மிக எளிதாக திசை மாறி விடுவார்கள்.

பள்ளிகளில் பையன முட்டிக்கு கீழ அடிங்க ஆனா படிக்க வச்சிருங்க என்று சொல்வார்கள். கல்லூரியில் CCTV இருக்கு, பையன்களுடன் பேச விட மாட்டார்கள், பெண்களுக்கு தனி பேருந்து என்று கல்லூரி செல்லும் மகள் மீது நம்பிக்கை இல்லாமல் இந்த வெளி பூச்சு மீது நம்பிக்கை வைத்து கல்லூரிக்கு அனுப்புவார்கள்.

கல்லூரியோ 15 லட்சத்துக்கு CCTV வசதி செய்து இருக்கோம், 2 கோடி ரூபாய்க்கு compound wall அமைத்து இருக்கிறோம் என்று சொல்லி விட்டு, கூடிய சீக்கிரம் Watchman போட போகிறோம் என்பார்கள்.

ஆனால் படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு கோவிலை கட்டி விட்டு அதுக்கு ஒரு பிள்ளையார் அவரை குளிப்பாட்ட ஒரு பூசாரியை வேலைக்கு வைப்பார்கள். கும்பாபிஷேகம் என்று லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள்.

படிக்க வரும் மாணவர்களிடம் இந்த மாதிரி சட்டை, கால் சட்டை தான் போடணும், Jeans Pant போட கூடாது, சட்டைல design, embroidery இருக்க கூடாது என்று ஆயிரம் condition போடுவார்கள்.

பின்னர் இந்த formal உடை அணிவதை தான் coporate companyகள் விரும்புகின்றன என்று தாங்கள் உருவாக்கிய அசட்டு சட்ட திட்டங்களுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.

பெண்கள் உடை விசயத்தில் இவர்கள் போடும் conditionயை வைத்து தனி புத்தகம் எழுதலாம். இத்தனைக்கும் Costume துறை ஒன்று கல்லூரியில் இருக்கும். அதன் துறைத்தலைவர் எந்த ரசனையும், சுய சிந்தனையும் இல்லாத அசட்டு பிறவியாக நிர்வாகத்துக்கு சாமரம் வீசி கொண்டிருப்பார்.

From 9am to 4 pm

1. கல்லூரிக்குள் நுழைந்த உடன் பையன் அடையாள அட்டையை அணிய வேண்டும்.

2. அணிகிறான் என்பதை உறுதி செய்ய 2 பேராசிரியர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

3. பையன் சட்டைல எல்லா பித்தானும் போட்டு இருக்கான?! கால் சட்டைல் zip இழுத்து விட்டிருக்கானா என்று check செய்வார்கள்.

4. இவர்கள் check செய்கிறார்கள் என்பதை check செய்ய சில அடிபொடிகளும், அதற்கு ஒரு தலைமையும் உண்டு. அவர் CCTV மூலம் கல்லூரியை மேய்த்து கொண்டு இருப்பார்.

5. பையன் முதல் மணி அடிக்கும் முன் வகுப்பிற்குள் நுழைய கூடாது. ஏன்னா???? அது அப்படித்தான்!!!! பிள்ளைக கற்புக்கு பாதுகாப்பு உண்டுன்னு வேற வேற வார்த்தைல சொல்லி தான் ஆள் சேத்து இருக்கிறார்கள்.

5. வகுப்பில் attendance order படி தான் உக்கார வேண்டும்.

6. எந்த break ஆக இருந்தாலும் பையன் வகுப்புல இருக்க கூடாது.

7. தப்பி தவறி பிள்ளைக கிட்ட பேசிட்டா கட்டம் கட்டி, கவுண்டமணி பாத்துட்டான், பாத்துட்டான் என்று ரோட்டில் படுத்து உருளுவது போல உருண்டு ஒப்பாரி வைத்து, ஊரை கூட்டி, ஒழுங்கு நடவடிக்கை என்று ஒரு வாரம் பாடம் நடத்தாமல் சுத்தி கொண்டிருப்பார்கள்.

8. இதற்குள் சாதாரண பின் புலத்தில் இருந்து வரும் பையன்கள் நடை பிணம் போல ஆகி விடுவார்கள்.

9. அவர்களுடைய Confidence level, Personality எல்லாத்தையும் தவறானதாக சொல்லி உடைத்து விடுவார்கள்.

10. இன்னும் சிலர் அடிமை பயிற்சியை கச்சித்தமாக பெறுவார்கள்.

11. சிந்திப்பதற்கான பயிற்சி என்பதே இல்லை என்று ஆன பின் பையனனோ, பெண்ணோ 3 வருசத்துல என்ன படித்துவிடுவார்கள்??!!

12. பேராசிரிய பெருமாட்டிகள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. 99% பேர் 'extra income' என்ற நோக்கத்தில் தான் வேலைக்கு வருகின்றனர். Makeup சாமான், சேலை வாங்க, hotel சென்று சாப்பிட என்று இந்த பணத்தை செலவு செய்வார்கள்.

13. நூலகம் என்ற ஒன்றை தான் வாழ்நாளில் பார்த்தே இருக்காத ஒரு நபர் தொலைக்கல்வியில் படித்த பட்டத்துடன் நூலகர் வேலை பார்ப்பார்.

14. மாணவர்களோட படிக்கிற ஆர்வத்துக்கு புத்தகத்திற்கும் இடையில் இவர் இருப்பார்.

15. நில்லுன்னா நிக்கணும், உக்காருணா உக்காரணும் இது தான் இங்கே கல்வி என்னும் பெயரில் கொடுக்கப்படும் பயிற்சி.

16. நாங்க நல்லா coaching, training கொடுப்போம் என்று Circus Company Owner மாதிரி அனைத்து பேராசிரியர்களும் ஒரே தொனியில் பேசுவர்.

17. ஒழுக்கம் தான் முக்கியம், படிப்பு ரெண்டாவது தான் என்பார்கள். Result வந்த பிறகு ஏன் 10 பேர் Arrear வச்சிருக்கான் என்பார்கள்.

18. எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் இல்ல என்று சொல்லிவிட்டு பேரசிரியர்களிடம் Admission அதிகரிக்க என்ன பண்ணுனீங்க என்பார்கள்.

19. நான் தான் அடிமை number 1 என்பதை நிரூபிக்கும் விதமாக mike கையில் வந்த உடன், Sir சொன்னார், அய்யா சொன்னாங்க என்று ஒப்பாரி வைப்பார்கள்.

20. அய்யாக்கு தெரிஞ்சா வசவு உரிச்சிருவார் என்று மகிழ்ச்சியாக சொல்வார்கள்.

21. அய்யா வரும் போது யாரும் எதிர்ல போக கூடாது என்பார்கள். அய்யா என்பவர் வெள்ளுடை வேந்தான கல்லூரி முதலாளி, கல்வி வள்ளல் மற்றும் செயலர். (அவரு ரோட்ல போகும் போது எதிர்ல lorry வந்தா என்ன செய்வார்னு யாராவது கேட்டு சொன்னா நல்லா இருக்கும். :-D ;-))

22. கல்லூரி முதல்வர் செயலரின் official துதிபாடி என்பதை பெருமையாக மேடை கிடைக்கும் போது எல்லாம் நிரூபிப்பார்.

23. Committee மேல் committee அமைத்து நீ செய் நீ செய் என்று ஒரு வேலையும் உருப்படியாக செய்ய மாட்டார்கள்.

25. பொது வாசிப்புக்கு புத்தகம் வாங்குவோம் ஒரு 10000 கொடுங்கள் என்றால், பிறகு பார்த்து கொள்ளலாம் என்பார்கள்.

26. Senior faculty, Junior faculty என்று 10000 சம்பளம் வாங்கும் இந்த அல்லக்கை கூட்டம் போடும் நாடகம் அபத்த வகையை சேர்ந்தது.

27. UGC scale of pay வாங்கும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியரை கண்டால் 'அம்மாவ' பார்த்த MLA மாதிரி தண்டால் எடுப்பார்கள்.

28. சுயநிதி பிரிவுகள் இயக்குனர் அவரின் கீழ் இருக்கும் பேராசிரிய புண்ணாக்குகளிடம் அரசு உதவி பெறும் கல்லூரி பேரசிரியர்களிடம் பேசுவதோ, சேர்ந்து தேனீர் அருந்துவதோ, ஒன்றாக ஒண்ணுக்கு போவதோ கூடாது என்று சொல்லி விட்டு, அவர்களை காணும் போது பல்லைக்காட்டுவார்.

29. இயக்குனர் பொழுது போகவில்லை என்றால் 'meeting' போட்டு போன வருசம் போட்ட meetingல் சொன்னதை திரும்ப சொல்வார். அவர் இயக்குனர் ஆன காலத்தில் இருந்து இந்த பாட்டை தான் பாடுகிறார் என்று அவரது அடிப்பொடிகள் சொல்கிறார்கள்.

30. மாணவர் meetingiலும் இதே தான்.

31. இப்படி programme பண்ணி பண்ணி மாணவர்களை, வேலை பார்ப்பவர்களை ஒரு எந்திரமாக மாற்றுவார்கள்.

32. Japanகாரன் robot செய்ய கோடிக்கணக்கில் செலவு செஞ்சு ஆராய்ச்சி பண்ணும் போது இங்கே இந்தியாவில் மனிதர்களை robot ஆக்கும் வித்தையை குறைந்த செலவில் கல்வி நிறுவனங்களும், அதை நிறுவிய கல்வி தந்தைகளும் கண்டு பிடித்து உள்ளார்கள்.

நிற்க.

தன்னிடம் வேலை செய்பவன் எந்த வித மனித உணர்ச்சியில்லாத எந்திரமாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதியாக வைத்து நேர் காணல் நடை பெறும்.

கோபப்படுவது சாணக்கியத்தனம் இல்லை. ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லி வைப்பார்கள். ரௌத்திரம் பழகு என்பது என்றைக்கும் நினைவுக்கு வராது.

நகைச்சுவை உணர்வு என்பது செயலர், முதல்வர், இயக்குனர் சேர்ந்து சிரிக்கும் போது சிரித்து வைப்பது.

நல்ல வேளை இந்த 21ம் நூற்றாண்டு மாணவர்கள் அவர்களாகவே படித்து கொள்ள ஆயிரக்கணக்கான வழிகளை திறந்து விட்டுள்ளது, இல்லாட்டி பட்டம் வாங்குன எந்திரத்தை வச்சி என்ன பண்றது??!!

Saturday, 13 August 2016

கதா நாயகனாக ஆவது எப்படி?!



கல்லூரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 5வது ஆண்டை துவக்கி விட்டேன். கடந்த நான்கு வருடத்தில் மாணவர்களுடன் பழகுவதில் இல்லாத அளவுக்கு ஒரு மனவிலக்கம் தற்போது உருவாகி உள்ளதாக உணர்கிறேன்.

நான் படிப்பதற்கு கல்லூரியில் சேர்ந்த போது எப்படி இருந்தேன் என்று யோசித்து பார்க்கிறேன்.

என்னுடைய பேராசிரியர்கள் என் வயதை அனுபவமாக கொண்டவர்கள். மெத்த படித்தவர்கள். உரையாற்றுவதில் மன்னாதி மன்னர்கள். திருத்தமாக உடை அணிந்து வருபவர்கள். மாணவர்களை கண்ணியமாக நடத்துபவர்கள். பெரும்பாலும் எந்த மாணவனும் அவர்களிடம் வம்பு வைத்து கொள்ள மாட்டான். வம்பு செய்பவனை கவனிக்கும் விதமாக கவனிப்பார்கள்.

இது போக நிர்வாகத்திடம் இருந்து எந்த எடுபிடி வேலையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகதவர்கள். மாணவனை அரவணைத்து வழி காட்டியவர்கள். அவனுக்கு கட்டணம் கட்ட என்று வருடத்திற்கு ஆயிரக்கணக்கான பணத்தை இழந்தவர்கள். வேலை உத்திரவாதத்துடன் அரசாங்க சம்பளம் வாங்கியவர்கள் அதனாலேயே அவர்களால் உலகியல் கவலை இல்லாமல் மாணவர் நலம் கருதி செயல் பட முடிந்தது என்று நம்புகிறேன்.

அவர்கள் ஆசான்கள்.

இந்த 2016ம் ஆண்டில் கல்லூரிக்கு வரும் செம்மறி ஆட்டு கூட்டத்தில் ஒளிந்திருக்கும் வெள்ளாட்டை கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் பெருக்கத்திற்கு பிறகு கல்வி சீனாவில் தயாரான பொருள் போல எந்த தரமும், உறுதியும் இல்லாததாக ஆகிவிட்டது.

இங்கே பணியில் சேரும் ஆசிரியர்கள் பெரும்பாலும் இதே கிணற்றை சேர்ந்த தவளையாக இருப்பர். அல்லது இந்த கிணற்று நீரின் நிறம், மனம், சுவை கொண்ட வேறொரு கிணற்று தவளையாக இருப்பர். தப்பி தவறி சில கடல் மீன்கள் உள்ளே வந்து விட்டு முழிப்பதும் உண்டு - என்னைச் சொன்னேன்.

இப்படி கல்லூரிகளில் காசு இருந்தால் கல்வி. இருக்கும் இடங்களை நிரப்புவது ஒன்றே குறிக்கோள். அதுவே கல்லூரியின் வெற்றியின், வளர்ச்சியின் அளவுகோள். கல்லூரி முதலாளியின் கல்லாபெட்டியின் திறவுகோள்.

நன்றாக படிப்பவர்கள், படிக்க கூடியவர்கள், மதிப்பெண் அதிகம் பெற்று அரசு கல்லூரி, அரசு உதவி பெரும் கல்லூரி என்று சென்று விட இங்கே வருபவர்கள் பணம் உள்ள, படிப்பை பற்றி அக்கறை இல்லாத, தடித்தனம் மிகுந்த சில்லுண்டிகள். விதி விலக்குகள் இருக்கலாம் ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலை அறிந்து நடந்து கொள்ளும் மாணவர்கள் விரல் விட்டு என்ன கூடிய அளவில் கூட இப்படி கல்லூரிகளில் இல்லை.

9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களை விளையாட்டு, வாசிப்பு, இசை, பயணம், என்று எதிலும் ஈடுபட விடாமல் செய்த பிறகு அவனுக்கு எஞ்சுவது தமிழ் சினிமா மட்டுமே. முடிவு - அசட்டு பிறவியாக கல்லூரியில் வந்து சேருகிறான். அவனை பொறுத்த வரை அவன் பார்த்த குப்பை படத்தில் வந்தது போல தான் கல்லூரி இருக்கும் என்று எண்ணி வருகிறான்.

ஆனால் இங்கே வந்தால் அவனை கதா நாயகனாக ஆக விடாமல் தடுக்க ஆயிரம் தடைகள்.

அவன் என்ன செய்வான்?!

அவனுக்கு வேண்டியது என்ன?!

கதா நாயகன் ஆக வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?!

கோமாளித்தனம், ரவுடித்தனம் செய்ய வேண்டும்!!!

சினிமாவில் அப்படி தான செய்கிறார்கள்?!!

ஜெயமோகனே பெண்களுக்கு ரவுடிகளையும், கோமாளிகளையும் பிடிக்கும் என்று எழுதிய பிறகு மறுத்து பேச என்ன இருக்கிறது?!

கதா நாயக நோய் பீடிக்கப்பட்ட மாணவனை கண்டு பிடிப்பது எப்படி?!

1. உடன் இருக்கும் நண்பர்களை மற்ற பையன்கள், குறிப்பாக பெண்கள் கேட்கும் விதமாக கிண்டல் செய்வான். சில சமயம் அடிப்பான். உடன் இருக்கும் மாணவர்கள் தன்னை சசி குமாராக நினைத்து கொண்டு விட்டது இது நீடிப்பதற்கு காரணம்.

2. எப்போதும் சத்தமாக பேசுவான். இப்போது கிசு கிசுவெனவும் பேசுகிறான். அசட்டுத்தனமாக சிரித்து கொண்டே இருப்பான். முட்டாள், முரட்டு மற்றும் டம்மி piece ஆக நடந்து கொள்வான்.

3. தல அல்லது தளபதியின் வெறியனாக காட்டிக்கொள்வான். இல்லாட்டி cricket பைத்தியம் ஆக இருப்பான்.

4. மலிவு விலை சங்கிலி, மோதிரம், கடிகாரம், கயிறு, (இப்போது இதில் ஜாதி கயிறும் சேர்த்தி) என்று accessories பயன் படுத்துவான்.

5. முகத்தில் முடி உள்ளவன் அதில் கோலம் போடுவான், இல்லாதவன் தலையில். பின்னாடி Ervamatin போன்றவை வெற்றி பெறுவதில் இவர்களின் பங்கு முக்கியமானது.

6. பல வண்ண சட்டை, கால் சட்டை, காலனி என்று அணிந்து வருவான். இவனை கட்டம் கட்ட கல்லூரியில் கைப்புள்ள பேராசிரியர்கள் கிளம்பி வருவார்கள்.

7. பேராசிரியை, அவர் அவன் அம்மா வயதை உடையவராக இருந்தாலும் சீண்டுவது போல பேசுவான். அக்கா வயது என்றால் பிரேமம் கோணத்தில் கற்பனை குதிரையை செலுத்துவான்.

8. இதற்கிடையில் வகுப்பில் இருப்பதிலேயே நிறமான பெண்ணை 'sincere'ஆக காதலிக்க தொடங்கி இருப்பான். இந்த பெண்ணின் கவனத்தை பெறுவதற்கு தலை கீழாக நடக்க கூட தயாராக இருப்பான். அவ்வப்போது நடந்தும் பார்ப்பான்.

9. ஆங்கிலம் அறிந்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். அதை விட இரண்டு மடங்கு உறுதியுடன் அவன் தமிழ் கற்றது தேர்வு முடிவுகள் வரும் போது தான் தெரியும்.

10. பீடி, சிகரெட், whisky, brandy, கள்ளச்சாராயம் என்று கிடைத்தவற்றை காலி செய்து அனைத்தையும் ஏற்று கொள்ளும் முற்போக்கு எண்ணம் உடைய புரட்சியாளன் என்று காட்டி கொள்வான்.

இந்த அசட்டு பிறவி கதா நாயக மாணவனிடம் ஏதாவது மாணவி் மயங்கினால் அதற்கு கல்லூரி நிர்வாகம் என்ன செய்யும் நியாயமாறே?!!

சரி, அப்போ படிக்கும் போதே கதா நாயகன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?! அதற்குத்தானே இவ்ளோ நேரம், தூரம், இந்த கட்டுரையை நகர்த்தி கொண்டு வந்தேன்.

இதோ கதா நாயகன் ஆவதற்கு செய்ய வேண்டியவை...

1. வகுப்பு பிடிக்க வில்லை என்றால் நூலகம் செல்ல வேண்டும். நூலகம் பிடிக்க வில்லையா canteen. அங்கே எதுவும் வாங்கி சாப்பிட்டால் அப்புறம் எங்கே போக வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2. தான் குடியிருக்கும் தெருவில் தெருவிளக்கு எரிய வில்லை என்றால் விரிவாக புகார்க்கடிதம் எழுதி உரிய ஆளிடம் சேர்பிக்க வேண்டும். சாக்கடை அடைத்து கொண்டால் குச்சி எடுத்து வந்து தள்ளி, polythene பையை இங்க போடாதீங்க அப்டின்னு advice பண்ணணும்.

3. பேருந்து நடத்துனர் சில்லறை இல்லை என்றாலோ, தர மறுத்தாலோ வண்டியை விட்டு இறங்கி சாலையில் அமர்ந்து போராட வேண்டும். படியில் தொங்குபவர்களை bus மேல் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்.

4. நாட்டு நிலவரம் பற்றி ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்க வேண்டும் மேலும் கடைசியாக அவர் என்ன புத்தகம் படித்தார் என்று கேட்க வேண்டும்.

5. கதா நாயக நோய்க்கூறு உள்ள மாணவனை திருத்த முயல வேண்டும். அவன் கெட்ட வார்த்தை பேசினால் சிரித்து கொண்டு, நீ என்னைய தூக்கி போட்டு மிதிப்பேன்னு நினைச்சேன், உன் வீரம் இவ்ளோதான என்று சீண்ட வேண்டும்.

6. எல்லாரும் Hitler, Che என்று பேசும் போது புத்தர், இயேசு, காந்தி என்று பேச வேண்டும்.

7. பிறந்த நாள் வந்தால் கடலை மிட்டாய், கருப்பட்டி மிட்டாய், தேன் மிட்டாய், பொறி உருண்டை என்று புது விதமாக கொண்டாட வேண்டும்.

8. டிவியில் கூட யாரும் பார்க்காத படத்தை theater சென்று பார்த்த கதையை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.

9. அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு எல்லாரும் profile picture மாத்தும் போது கல்லூரிக்கு விடுமுறை எடுத்து அவர் எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டும்.

10. பீடி, வெள்ளை பீடி, குளிர் பானம், மது பானம் என்று அனைத்தையும் நிராகரிக்க வேண்டும்.

பெண்கள் முன்னவர்களை கிறுக்கன், பொறுக்கி, லூசு, அரைவெட்டு, வெத்து வேட்டு, மொக்கை pieceசு என்றும் பின்னவனை Psycho, பைத்தியம், அவன் கொஞ்சம் ஒரு மாதிரி  என்றும் விளிப்பார்கள்.

இது தெரியாம இந்த பசங்க வாழ்க்கைல 3 வருசத்தை செலவெழுதிட்டு சுத்திட்டு இருப்பான்.

இந்த பகடிகளுக்கு அப்பால்...

இப்போது உள்ள பேராசிரியர்களால் கல்லூரிக்கு புதிதாக வரும் மாணவர்களிடம் கனவுகளை, லட்சியங்களை, கொள்கைகளை, குறிக்கோள்களை விதைக்க முடிய வில்லை.

அவன் சட்டை, கால் சட்டை தலை மயிர் என்று அவனை ஆராய்ந்து விட்டு அவன் புத்தி, உள்ளம், கனவுகள் பற்றி எதுவும் அறிந்து கொள்ள விரும்பாமல் கடந்து சென்று விடுகிறார்கள்.

மாணவர்களுக்கும் முன் மாதிரியாக கொள்ள உதாரண பேராசிரியர்களும் இல்லை. பேராசிரிய புலிகளுக்கும் வேலை உத்திரவாதம், நிறைவான சம்பளம் என்று இல்லை என்று வரும் போது உலகியல் கவலையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் சட்டைல பித்தான் இல்லாம வந்தான் என்று சிக்கும்  மாணவனை ஏதோ 9000 கோடி கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடுனவனை பிடிச்சிட்ட மாதிரி பெருமையாக கருதுகிறார்கள். இப்படி செய்வது தன்னுடைய வேலையை தக்க வைத்து கொள்ள உதவும் என்று நம்புகிறார்கள்.

அதாவது ஆசிரியராக, முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் கலாச்சார காவலர் வேசம் கட்டி ஆடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது எல்லாரும் கைப்பாவை தான் ஆக முடியும் கதா நாயகன் எப்படி ஆக முடியும் அய்யா?!!

என்ன இந்த கட்டுரையில் மாணவிகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?!! என்று நினைத்தால் விதிவிலக்குகள் தவிர்த்து அவர்களின் அசட்டுத்தனம் மாணவர்களுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை என்று சொல்லி முடித்து கொள்கிறேன்.





Saturday, 30 July 2016

எங்கே எனது இடம்?!!


'திரைகடல் ஓடியும் திரவியம் தேட' வேண்டிய 24 வயதில் வீடு திரும்புவது என்று முடிவு எடுத்த போது அது மிக சரியான முடிவு என்று ஒரு உள்ளுணர்வு. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த முடிவு சரிதானா என்ற குழப்பம் என்னை ஆட்டுவிக்கிறது.

Hostel, வேலை செய்யும் போது தங்கிய இடங்களில் தான் மிக்க மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்தால் என்ன குறைந்து விடுவோம்?! என்றும், நம்ம சொந்த ஊரில் இருப்பவன் எல்லாம் மனுசன் இல்லையா?!, எதுக்கு வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை வாடகைக்கு குடுக்க வேண்டும்?! என்று யோசித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

இப்பொது சொந்த ஊரில் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. எல்லோரும் பொருள் தேடி பறந்து கொண்டிருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்று ஓரிரு நாள் வந்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

கல்லூரி படிக்கும் போது நண்பர்கள் வீட்டில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டை அடித்து மகிழ்ந்து இருந்தோம். இப்போது நண்பர்களின் வீட்டிற்கு போனால் அவர்களின் அம்மா, அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிவதில்லை.

 'தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா?', 'உனக்கு இப்போ சம்பளம் எவ்ளோ தாராங்க?', 'வேற வேலைக்கு முயற்சி பண்ணலையா?', 'சென்னை, கோவைன்னு வேலைக்கு try பண்ண வேண்டியது தான?' 'Professor வேலைக்கு 30 லட்சம் கேக்குறானமே?', இது எல்லாம் தெரிந்த பிறகு இறுதி கேள்வி 'உனக்கு கல்யாணம் எப்போ?'

இப்படி கேள்விகளுக்கு பெரும்பாலும் 'ஆமாம்', 'ஹா ஹா,' என்று சிரித்து சமாளித்து விட்டு வர வேண்டி இருக்கும். கல்யாணத்தை பத்தி கேட்பவர்கள் ஒரு 20 லட்சம் பணம் குடுத்து முதலில் வேலை ஒன்றை விலைக்கு வாங்க உதவினால் நல்லா இருக்கும். இவிங்க கேக்குறாங்க அப்டின்னு கல்யாணம் பண்ணா அப்புறம் நம்ம லட்சியம் என்ன ஆகுறது?!:-D

பணம் சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தண்ணி அடித்து கொண்டு பேசுவது தான் நல்லா இருக்கும் என்று bar பக்கம் வண்டியை விடுகின்றனர். என்னை போன்ற பச்சை மண்ணுகளெல்லாம் என்ன செய்வதென்று அறியாது விழி பிதுங்கி நிற்கிறோம்!!!

மெட்ராஸ், பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெரிய ஊர்களில்,  கடற்கரை, பூங்கா, Mall என்று பொது இடங்கள் நிறைய இருக்கும். அங்கே உலாத்தி கொண்டே கதைக்கலாம். ஆனால் கோவில்பட்டி மாதிரி ஒரு ஊரில் பொது வெளி என்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருக்கும் ஒரு பூங்காவிலும் பாம்புகள் குடியேறி இருக்கும். பெருசுகள் கூடி காரசாரமாக மாலைமுரசு, தினத்தந்தி என்று அரசியல் பேசிக்கொண்டு இருபார்கள்.

கோவில்களில் உண்டியல்களின் எண்ணிக்கை தான் அதிகம் இருக்கிறது. சாமியை தேடத்தான் வேண்டும். இதையும் மீறிய பொது வெளி என்பது 'நவீன பார் வசதி' கொண்ட 'TASMAC' தான். சந்தேகம் இருந்தால் சாயங்காலம் உங்கள் ஊரை கிரிவலம் வாருங்கள். வண்டிகள் எங்கெங்கே அதிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று கவனியுங்கள்.

உறவினர் வீடுகளுக்கு போனாலும் இடைவிடாமல் தொலைக்காட்சி கதறிக்கொண்டிருக்கும். நல்ல நாள் அதுவுமா எல்லா வீட்டிலும் எல்லா பயபுள்ளைகளும் டிவியே கதின்னு தான் கிடக்கிறார்கள்.

படித்த கல்லூரிக்கு போலாம்னா அவிங்க வாசல்ல நிறுத்தி ஆயிரம் கேள்வி கேக்குறாய்ங்க. Alumni meet இருக்கு வான்னு கூப்பிடுவாங்க. வடிவேலுவ ஒரு பொடியன் திட்டி ஓட விட்டு kidneyய எடுத்திட்டு விட்டது கண் முன்னாடி வந்து போகும். பள்ளிக்கூடம் பக்கம் போனால் உடனே donation குடுங்க என்று ஓடி வருவார்கள்.

நண்பனுக்கு கல்யாணம் என்று நண்பர்கள் ஒண்ணு கூடினாலும் முதல் நாள் தண்ணி போட்டு விட்டு ஒரு அணி மல்லாந்து விடும். மண்டபத்தில் loud speaker கதறும். அட அமத்தி போடுங்கன்னா கேக்க மாட்டாய்ங்க. இதுக்கு மேல photo எடுத்து, Selfie எடுத்து FB, Whatsapp group என்று பதிவேற்றுவதில் நேரம் போகும்.

அட படிக்கும் போது அர்த்தமே இல்லாம பேசி அரட்டை அடிச்ச மாதிரி இனிமே நடக்காது போல அப்டின்னு நினைச்சுகிட்டு வீட்டுக்கு கிளம்பிட வேண்டியது தான்.

வீட்டுக்கு வந்தா டிவில அன்னைக்கு பரபரப்பான விசயம், அப்டி எதுவும் இல்லாட்டினாலும் இவிங்களே பரபரப்பா ஆக்கி ஊளை விட்டு, பாருங்க மக்களே பாருங்க என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பார்கள்.

இந்த டிவிஇறைச்சல் இல்லாம இருக்கிற வீடு எங்கையாவது இருக்கா?!! அப்டி இருந்தா அந்த வீடு வேண்டாம் அது பக்கத்துல உள்ள வீடு வாடகைக்கு கிடைச்சா போதும்.

வேலை பாக்குற இடத்தில தினமும் சொம்பைகளை சமாளித்து விட்டு வீட்டுக்கு வந்தால் டிவியில் வரும் பைத்தியங்கள் போலியாக வியந்து, சிரித்து, கோபப்பட்டு, நெகிழ்ந்து என்று வெறுப்பு ஏத்துவார்கள்.

எதனால தமிழ் சமூகம் இப்படி இறைச்சல் மிகுந்த சமூகமா இருக்கு?!

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?!!

எதிர்பார்க்கும் அமைதி வீட்டில் இல்லாவிட்டால் வேறு எங்கே போவது?!

ஜெயகாந்தன் எழுதின ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் படித்தது இல்லை ஆனா தலைப்பு மட்டுமே போதுமானதா இருக்கு. இந்த வீட்டிற்குள் உள்ள உலகம் நம் விருப்பப்படி, கனவுப்படி இல்லை என்று தெரிந்த பிறகு வீடு அந்நியமாக ஆகி விடுகிறது.

கூட்டுக்குடும்பம் என்கிற கோட்பாடு, வாழ்க்கை முறை விவசாயம், தொழில் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு இருந்த போது செல்லுபடி ஆகி இருக்கலாம். அங்கே தனி மனிதன் என்பது இல்லை. குடும்பமாக இணைந்து தான் அனைத்தையும் செய்ய முடியும்.

ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில்... தனி மனிதன், அவனுடைய கொள்கைகள், லட்சியம், கனவு என்று திட்டமிடும் போது அது இயல்பாகவே குடும்பத்தில் முரண் பாடுகளை கொண்டு வருகிறது. கனவு கண்ட படி வாழ்க்கை வாழ சூழ்நிலை இடம் குடுக்க மறுக்கும் போது சமரசம் கசப்புகளை அளித்து வெறுமையால் உள்ளத்தை நிறப்புகிறது. பின்னர் கூட்டு குடும்பம் என்ன?! கணவன் மனைவி என்று சேர்ந்து வாழ்வதே பெரும்பாடாகி விடுகிறது.

இங்கே கனவு என்பது சிகப்பான மனைவி, குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட வீடு, கார் என்று செட்டில் ஆவது அல்ல.

எனக்கே எனக்கு என்று ஒரு அமைதியான இடம்!!! பக்கத்து வீட்டு டிவி சத்தம் கேக்காத, கோவில் திருவிழான்னு loud speaker கத்தாத, எனக்கு ஓட்டு போடுங்கன்னு சத்தமா பிச்சை கேக்காத, roadல போறவன் வாறவன் சும்மா horn அடிக்காத, பக்கத்துல நாலு மரம், செடின்னு உள்ள ஒரு அமைதியான இடம்.

நண்பர்கள் வந்தால் அமர்ந்து கதைப்பதற்கு, புத்தகம் படிப்பதற்கு, நல்ல திரைப்படத்தை பார்ப்பதற்கு, மென்மையான பாட்டு கேட்பதற்கு, நிம்மதியாக உறங்குவதற்கு, கொஞ்சம் சிந்திப்பதற்கு, கொஞ்சம் எழுதுவதற்கு, இதுக்கெல்லாம் ஒரு இடம்.

நான் கேட்பது அதிகப்பிரசங்கிதனமா இருக்கா?!

இந்த 21ம் நூற்றாண்டுல கூட ஒரு அமைதியான இடத்தை உருவாக்க வாய்ப்பு இல்லையா என்ன?!

எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்று தாயுமானவர் சொன்னதாக ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, மற்றும் கடலுக்கு அப்பால் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன, அது உண்மை தான?!!

கீழ உள்ள மூணு வரி கவிதை மாதிரி தெரியுதா??!! நானே எழுதினேன். :-)

வழி தவறிய எறும்பை போல
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கே என் இடம் என்று!

பி.கு.

தேடுபவன் கண்டடைவான் அப்டின்னு ஜெயமோகன் சொல்லி இருக்கார்.

நல்லா படிங்க...

ஜெயகாந்தன் இல்ல ஜெயமோகன்... ;-)















Sunday, 17 July 2016

கடிதம் எழுதுவது எப்படி?!





இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. படித்து மனம் புண்பட்டால் எழுதியவர் பொறுப்பு அல்ல. கட்டுரை பிடித்திருந்தால் தாராளமாக பாராட்டலாம். காசு, பணம் குடுத்தாலும் சந்தோசம் தான். ;-) :-D :-P

'காதல் கடிதம் எழுதுவது எப்படி?!' அப்டின்னு தான் தலைப்பு வச்சேன். அப்புறம் Professor ஒருத்தன் Love Letter எழுத மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்கிறான்னு கலாச்சார காவலர்கள் கிளம்பி வந்து விடுவார்கள் என்று தான் தலைப்பை மாத்தி விட்டேன்.

இந்த கலாச்சார காவலர் புண்ணாக்குகள் தலைப்பை தாண்டி படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.

எனக்கு 28 வயசு ஆச்சு.

இது வரை ஒருத்தருக்கு கூட காதல் கடிதம் என்ன, கடிதமே எழுதியது இல்லை.

பள்ளிகளில் கற்பனையில் உதித்த நண்பர்களுக்கு, சுற்றுலா குறித்து, கோடை விடுமுறை குறித்து கடிதம் எழுத சொல்லி பயிற்சி கொடுப்பார்கள். தேர்வில் எழுதி தேறுவதற்கு.

அப்புறம் விடுமுறை கேட்டு விண்ணப்பம், Englishல என்னன்னு கேட்கவா வேணும்?!?!

Email id தொடங்கிய பின்னர், எனது Professor ஒருவருக்கு அவ்வப்போது mail அனுப்பிக்கொண்டிருந்தேன். FB வந்த பிறகு அதிலே message அனுப்பி கேட்டு கொள்வது.

பள்ளியில் இருக்கும் போது வீட்டுக்கு எழுதுவது போல சொல்லி தந்த கடிதம் பெரும்பாலும் சுற்றுலா செல்வதற்கு பணம் கேட்டு எழுதியதாகவே இருக்கும்.

கல்லூரி சென்ற பிறகு free sms அப்புறம் காசு குடுத்து sms என்று காலம் ஓடியது. கடிதம் எழுத வேண்டிய தேவையே இல்லை.

சூழல் இப்படி இருக்கும் போது காதல் கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன?!!

அதற்கான பொறுமை யாருக்கு இருக்கிறது?!!

காதலிப்பவர்கள் மட்டும் அல்ல, கணவன்-மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என கொஞ்சம், இல்லை இல்லை ஒரு 15 முதல் 20 வருடத்துக்கு முன்பு வரை எல்லாரும் கடிதம் எழுதி கொண்டு தானே இருந்தோம்.

இந்த Whatsapp Instant Messenger யுகத்தில், யுவனும், யுவதியும் Smiley அனுப்பியே பேசி முடித்து விடுகிறார்கள்.

Phone பேசும் போது அப்புறம் அப்புறம் என்று பேச விசயமில்லாமல் முழிக்கிறார்கள்.

கடிதம் கொஞ்ச நேரம் எடுத்து பொறுமையாக எழுதி, அதை அனுப்பி அதற்கான பதிலுக்கு காத்திருப்பது என்பது ஒரு மாதிரி கலவையான உணர்ச்சி தான்.

நீங்கள் 5 பக்கம் உங்கள் மனதில் உள்ளதை கொட்டி காதல் கடிதம் எழுதி அதற்கு வெறும் K என்று பதில் வந்தால் அப்படி பையனையோ, பெண்ணை கண்டிப்பா காதலிக்கணுமா என்ன?!!

30, 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை முன்வைக்கும் ஒரேயொரு கேள்வி பொண்ணுக்கு எழுத படிக்க தெரியுமா என்பதாக தான் இருந்திருக்க வேண்டும்.

Land Line Phone கூட ஊருக்கு ஒன்று என்று இருந்த அந்த காலத்தில், வெளியூரில் வேலையில் இருக்கும் கணவர் மனைவியுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது கடிதம் மூலமே சாத்திய பட்டிருக்கும்.

மனைவிக்கு எழுத படிக்க தெரியாது என்றால் இவருடைய கடிதம் மற்றொருவர் படித்து மனைவியிடம் சொல்வது போல் ஆகிவிடும். அதே போல் மனைவியும் இன்னொருவர் உதவியுடன் கடிதம் எழுதி அனுப்ப வேண்டி வரும்.

காதலர் இடையில் காற்று நுழைவது கூட அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று சங்க கவிதை எல்லாம் இருக்கு. அப்டி இருக்கும் போது இந்த கடிதம் newspaper மாதிரி எல்லாரும் படிக்க போறாங்க அப்டீன்னா மனுஷன் எப்படி அன்பை, காதலை, ஏக்கத்தை, தவிப்பை வெளிப் படுத்துவான். இவர்கள் பேசுவது எல்லாமே புற வயமான விஷயமாக தான இருக்கும்.

அப்படி இருப்பது அகச்சிக்கல்களுக்கு இட்டு செல்லாத?!!

ஒவ்வொரு மனுசனுக்கும் கடிதம் எழுத ஒரு உறவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்டி எழுத யாரும் இல்லையென்றால் ஒவ்வொருவரும் கற்பனையாக ஒரு காதலன், காதலியை உருவாக்கி மனதில் உள்ளதை அந்த கடிதத்தில் இறக்கி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

 (இங்கே மனுசன் என்பது ஆண், பெண் இருவரையும் சேர்த்து தான் (பெண்ணியவாதிகள் கிட்டயும் சண்டை போட்டு முடியாது, அதான் இந்த 'பொறுப்பு துறப்பு'))

அது ஏன் கற்பனை காதலன், காதலி என்று கேள்வி எழுந்தால், இங்கே தமிழ்ச்சமுகத்தில் உறவுகளுக்கும், நட்புக்கும் பஞ்சம் இல்லை. இந்த 4G யுகத்தில் சுற்றமும், நட்பும், அனைத்தையும் மொண்ணையான கண்ணோட்டத்தில் பார்க்க பழகிக்கொண்டிருக்கிறது. போக நம்ம call பண்ணும் போது attend பண்ணாம விட்டுட்டு பிறகு பார்த்து திருப்பி கூப்பிடாத பக்கிக நமக்காக கடிதம் எழுதுவாய்ங்க??!!ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆண், பெண் நட்பே குதிரை கொம்பு என்று ஆகும் போது, காதல் என்பது எல்லாருக்கும் எங்கே வாய்க்க போகிறது. காதலை பற்றி தெரிந்த பெற்றோர், ஆசிரியர் இல்லவே இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்த சூழலில் ஒரு பெண் ஒரு பையனிடம் பென்சில் கேட்டால் கூட பையன் காதலுக்கான அறிகுறி என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறான். Propose பண்ணி bulb வாங்குகிறான்.

ஒரு பெண்ணை, பையனை பிடித்து விட்டது என்றால் உங்கள் மனதில் உள்ளதை ஒரு கடிதமாக எழுதுங்கள். மிகை உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் எழுதுங்கள். யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வையுங்கள். ஒரு 10 நாள் கழித்து எடுத்து மீண்டும் படியுங்கள். உங்கள் மனசை அலை பாய வைத்த விசயத்திற்கு விடை கிடைத்திருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எனது நண்பர்கள், resignation, grievance முதல் explanation letter வரை ஆங்கிலத்தில் எழுத என்னை அவ்வப்போது தொடர்பு கொள்வர்.

MBA, MA என்று படித்த நண்பர்களால் ஏன் ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மனப்பாடம் பண்ணி எழுத சொல்லி குடுத்த நேரத்தில் மனதில் உள்ளதை எழுதி படித்து பார்க்க சொல்லி கொடுத்திருந்தால் நாம் ஓர் சிந்திக்கும் சமூகமாக மாறி இருப்போம்.

கல்லூரியில் பின்னூட்டம் எழுதி வாங்கும் போது நூறில் ஒருவர் தான் மனதில் உள்ளதை உள்ள படி எழுதி கொடுக்கின்றனர். அந்த பின்னூட்டம் எழுதிய நபர் மிகவும் உறுதியானவர் என்பதை சொல்லும். அந்த கடிதம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Proposal வரும் போது (இதுக்கு நல்ல தமிழ் வார்த்தை இல்லையா?!) பையனோ, பெண்ணோ,  'உன் மனசில் உள்ளதை கடிதமா எழுதி கொண்டு வா, படிச்சுட்டு சொல்றேன்' என்று சொன்னால் போதும், தொல்லை தருபவர்கள் ஓடி விடுவார்கள்.

எழுதிக்கொண்டு வருபவரை பிடிக்காத பட்சத்தில் விவரமாக மறுப்பு கடிதம் எழுதி விசயத்தை முடித்து கொள்ளலாம்.

இதற்க்கு சில விதிகளை கடை பிடிக்கலாம்.

1. கடிதம் தங்கிலத்தில் இருந்தால் நிராகரிக்கலாம்.

2. இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை, சந்திப்பிழை இருந்தால் பிழைத்து போகட்டும் என்று மறுவாய்ப்பு தரலாம்.

3. கடிதம் நன்றாக இருந்தால் 10 நாள் அவகாசம் கேட்டு 10 நாளுக்கு பிறகும் பட்டாம்பூச்சி பறக்கிறதா என்று பார்க்கலாம்.

4. இப்படி கடுமையான வரைமுறைகளை கடைபிடிக்கும் போது தமிழில் எழுதுபவர்களுக்கு தான் காதலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இதனால் தமிழ் வாழும்.

5. இதயங்கள் இணைந்துவிட்டால் காதல் கடிதம் எழுத தனி நோட்டுப்புத்தகம் ஒன்றை போட்டு, தினசரி எழுதி பரிமாறிக்கொள்ளலாம். எப்படியும் தேவைக்கு அதிகமாக பள்ளி கல்லூரிகளில் நோட்டுப்புத்தகம் தருவார்கள். அதை ஏன் வீணாக்க வேண்டும்?!?!

6. இப்படி காதலித்தால் காந்திய பொருளாதார விதிகள் படி செலவு மிச்சமாகும்.

7. வகுப்பில் ஆசிரியர் விடும் கதை பிடிக்க வில்லை என்றால் நீங்கள் குறிப்பு எடுப்பது போல் கடிதம் எழுதுவதை தொடரலாம்.

8. ஊடல் வரும் போது பழைய கடிதங்களை படித்து பார்த்து மனம் திரும்பலாம்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இதுக்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை அதனால் இந்த கட்டுரை இதோடு நிறைவு பெறுகிறது. ;-)









Saturday, 2 July 2016

The Godfather கோவில்பட்டிக்கு வந்த கதை...



1999 அல்லது 1998ம் வருட Manorama Year Book. அது ஒரு குட்டி கலைக்களஞ்சியம். அதில் சுவாரசியமான பல செய்திகள் அங்கங்கே சின்ன பெட்டிகளில் குடுக்க பட்டிருக்கும். மற்ற கட்டுரைகள், தகவல்கள் படிக்கும் அளவுக்கு அப்போது மன முதிர்ச்சி இல்லை.

Greatest 10 films of Hollywood என்று ஒரு பெட்டி செய்தி.

அதில் Casablanca முதல் இடத்திலும், Citizen Kane 2வது இடத்திலும், The Godfather 3வது இடத்திலும் இருந்தது. Gone With the Wind, Lawrence of Arabia, The Wizard of Oz, The Graduate, On the Waterfront, Schindler's List Singing in the Rain ஆகியவை மற்ற படங்கள்.

The Godfather பேரை பார்த்த பிறகு, தலைப்பு நல்லா இருக்கே இது தான முதல் இடத்துல இருக்கணும், ஆனா Casablanca அப்டின்னு ஏதோ பேர் சரியில்லாத படம்ல இருக்குன்னு யோசிச்சேன்.

அந்த 10 வயதில் The Godfather அப்படிங்கிற தலைப்பு மீது அப்டி ஒரு ஈர்ப்பு. அந்த வயதில், தினத் தந்தியில் வரும் கன்னித்தீவு, தங்க மலர், வெள்ளி மலர் சினிமா செய்திகள் என்று நாள், வாரம் தவறாமல் படிப்பேன். அப்டி ஒரு நாள் படிக்கும் போது The Godfather பாதிப்பில் தான் நாயகன் படம் எடுக்க பட்டது என்று படித்தேன்.

அடடே நமக்கு தெரிஞ்ச படம் பார்த்து தான எடுத்திருக்காங்க என்று மனமெல்லாம் பெருமை. இத என் நண்பர்கள் கிட்ட சொல்லலாம்னா அவிங்க அப்போ தான் Cartoon ல இருந்து WWFக்கு முன்னேறிட்டு இருக்காங்க.

இதன் பிறகு கோடை விடுமுறைகளில் ஒன்று விட்ட அண்ணன், அவனுடைய எல்லாம் தெரிஞ்ச நண்பன் என்று அவர்களுடன் Onida TVயில் (Neighbour's envy Owner's Pride) Hollywood படங்கள் பார்க்க ஆரம்பித்தேன், Rocketeer, Judgement Day ஆகியவை முதன் முதலாக பார்த்த படங்கள். அப்போது subtitle எல்லாம் கிடையாது, அவிங்க கதைன்னு சொல்றத நம்பிட்டு visuals பாத்து மிரண்டு போய் உக்காந்து இருப்பேன்.

பிறகு teenageல Star Moviesல புரியுதோ புரியலையோ படங்கள் பார்ப்பது என்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது. இடையிடையே வரும் காதல் காட்சிகள் முக்கிய காரணம் என்றாலும் action காட்சிகள் வரும் போது channelலை மாற்றியது இல்லை.

அப்போது தான் Misson Impossible II போன்ற படங்கள் dub செய்யப்பட்டு வெளியாகின. வீட்டுல இந்த மாதிரி படத்துக்கு எங்க கூட்டிட்டு போக போறாங்க?! அதனால படத்தின் poster பார்த்து மகிழ்ந்து கொள்வது.

பின்னர் ஒரு 2 வருடம் கழித்து Spider Man படம் வந்தது. அப்போ 9ம் வகுப்பில் இருந்தேன். (படிச்சேன்லாம் சொல்ல முடியாது)
15 ரூபாய் கட்டணம். இதற்கு முன்னாடி ஆளவந்தான் மாதிரி படங்களை அரை trouser அணிந்து சென்று பெண்கள் பகுதியில் ticket வாங்கி, தீபாவளி அன்று முதல் show பார்த்த சாகசங்கள் எல்லாம் செய்த அனுபவம்.

தனியாக கிளம்பி விட்டேன். Spider Man மிகவும் பிடித்திருந்தது, போக பயபுள்ள நமக்கு தெரிஞ்ச, புரிஞ்ச மொழியில் பேசுறானே. அப்புறம் தமிழ் சினிமாவில் சாத்தியம் இல்லாத கொஞ்சல் காட்சிகளும் உண்டே!!!

இதன் பிறகு 1 ரூபாய், 2 ரூபாய் என்று சேர்த்து வைத்து அத்தனை dubbing படங்களையும் பார்ப்பது. குறிப்பாக Jackie Chan, Jet Li படங்கள்.

இதற்கிடையில் The Godfather படம் பற்றி அவ்வப்போது கேள்வி பட்டும், படித்து கொண்டும் தான் இருக்கிறேன். Star Movies ல் போட்டாலும், Judgement Day, Jurassic Park, Godzilla, Shanghai Noon, Rush Hour, James Bond படங்கள் பார்க்க முடிந்த அளவுக்கு The Godfather படத்தை பார்க்க முடியவில்லை. புரியவில்லை. Santino Corleone தனது தங்கை கணவனை அடித்து நொறுக்கும் காட்சியை 2 முறை பார்த்ததாக நியாபகம்.

Higher Secondary படிக்கும் போது சினிமா செய்திகள் படிப்பது பாட புத்தகத்தை விட முக்கியமாக மாறி விட்டது. The Hindu Paper படிச்சா English Knowledge improve ஆகும்னு எங்க அப்பா வாங்கிட்டு வருவார். அதுல எப்பவுமே முதல்ல எந்த channelல எந்த படம்னு தான் பாக்கிறது. அப்புறம் Friday Reviewல உள்ள சினிமா செய்திகள்.

அப்போ Sliver, Species
 போன்ற படங்கள் எப்போ போடுறான் என்று wait பண்ணி night படிக்க போறேன் என்று சொல்லி விட்டு படம் பார்ப்பது, மறுநாள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இயக்குனர் பாலா, செல்வ ராகவன், கவுதம் மேனன் என்று அவர்கள் படங்கள் வந்தால் theater போவோம் அப்படிங்கிற அளவுக்கு வந்தாச்சு. வளர்ந்தாச்சு.

2006ல், VCR, CD Player என்று எதுவுமே பயன்படுத்தி இருக்காத எங்கள் வீட்டில் ஒரு DVD player வாங்கினோம்.

அந்த மனோரமா புத்தகம் அப்போதும் என்னிடம் இருந்தது. அந்த 10 படங்கள் என் மனதில் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்த்து கொண்டேன்.

கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு 100 கிலோமீட்டர் இருக்கும். ரயிலில் 15 ரூபாய் கட்டணம். 200 ரூபாய் இருந்தால் மதுரை கிளம்பி விடுவோம். ஒரு DVD 20 ரூபாய்.

மதுரை மீனாட்சி பஜாரில் DVD கடையில் The Godfather படத்தை வாங்கி விட்டேன். Godfather படம் மூன்று பகுதிகள் கொண்டது என்பது எனக்கு அப்போது தான்  தெரியும்.

Casablanca, Gone With The Wind, Singing in the Rain, Lawrence of Arabia, Schindler's List, The Sound of Music ஆகிய படங்களும் வாங்கினேன். இதில் The Sound of Music இன்னும் பார்த்து முடிக்கவில்லை.

வீட்டிற்கு வந்து ஆர்வமாக படத்தை DVD யில் போட்டேன். 'I believe in America'என்று படம் ஆரம்பித்தது.

இந்த முதல் காட்சியே நாயகன் படத்தில் எப்படி உருமாற்றம் பெற்றிருந்தது என்று கண்டு கொண்டேன்.

Vito Corleone பேசும் போது DVD யில் எதுவும் பிரச்சினையா என்று பயந்து விட்டேன். என்னடா பெரிய Don என்று பார்த்தால் குரல் சரியாக இல்லையே என்று வருத்தம்.

Marlon Brando பெரிய நடிகர், சிவாஜி அவரை சந்தித்து இருக்கிறார், 2 முறை Oscar வாங்கியிருக்கிறார், அதில் Godfatherக்கு ஒன்று என்று தினத் தந்தியில் படித்தோமே என்று மனசு ஓடிக்கொண்டிருந்தது.

நான் அப்போது BA ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவன், கல்லூரியில் பக்கா ஆங்கிலத்தில் வகுப்பு எடுக்கும் Professors அரை dozen பேர் இருந்ததார்கள், அவர்கள் ஆங்கிலம் பேசி கேட்டு பழகி இருந்ததாலும், subtitle இருந்ததாலும் படம் புரிவதில் ஒரு குழப்பமும் இல்லை.

Sollozo விடம் Don business பேசும் காட்சியை பார்த்த பிறகு, இது வரை நாம பார்த்த படங்கள், அதுல உள்ள நடிப்பு எல்லாம் ஒண்ணுமே இல்லை அப்டின்னு புரிஞ்சுட்டு. Marlon Brando ஏன் உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருக்கிறார் என்பது படம் தொடங்கி 40 நிமிடத்தில் எனக்கு விளங்கி விட்டது.

அடுத்த 5 நிமிடத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட, என்னடா Climax அதுக்குள்ள வந்துட்டா என்று பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது படம் 3 மணி நேரம் என்று.

'It's my family kay, not me' என்று தனது குடும்பத்தின் இன்னொரு முகத்தை பற்றி காதலியிடம்  சொன்ன Mike Corleone, அப்பாவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து உடனே செயல் படுகிறான்.

என்ன தான் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்தாலும் அவர்களுக்கு என்று சில தர்மங்கள், அறங்களை கடை பிடிக்கும் கதாபாத்திரங்கள் Godfather ஏன் Gangster படங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.

நம்மூர்ல வில்லன் கதாநாயகன் கூட சண்டைனா நேர போய் நாயகனோட குடும்பத்தை தான் கை வைப்பான். ஆனா இங்க Civilian, part of the Family என்று பிரித்து பார்க்கும் விதத்தை கண்டு, அதுவும் சரி தான சம்பந்த பட்டவனை தான அடிக்கணும், அவன் பொண்டாட்டி, பிள்ளைகளை அடிக்கிறது என்ன நியாயம்ன்னு நினைச்சேன்.

 பின்னர் இதே Principle பற்றி பொல்லாதவன் படத்தில் செல்வம் பேசுவதை கண்டு தமிழ் சினிமா மேலோட்டமான காட்சிகள் தாண்டி பிறிதொரு ஆங்கில அல்லது வேற்று மொழி படத்தின் உள்ளடக்கத்தை பயன்படுத்தும்  அடுத்த கட்ட முயற்சிக்கு அடித்தளம் போட ஆர்மபிச்சாச்சு போல என்று நினைத்தேன்.

வேற வழியில்லாமல் Civilian Mike Corleone இந்த ஆட்டத்தில் இறங்குகிறான். அதன் மூலம் part of the Family ஆகிறான்.

 காதலியின் மீண்டும் எப்போது சந்திப்பது என்ற கேள்விக்கு ஒரு உறுதியான பதில் கூற முடியாமல் பிரிகிறான்.

இதன் பிறகு Mike Corleone இரண்டு பேரை கொலை செய்து விட்டு Sicily செல்வது அங்கே ஒரு பெண் மீது காதல் கொண்ட பிறகு அவளுடைய தகப்பனிடம் பேசி பெண் கேட்கும் காட்சியை அப்போதே மிகவும் ரசித்தேன். Rewind செய்து மறுபடியும் பார்த்தேன். அந்த பெண்ணுடைய பெயர் Apollonia. ஏதோ கிரேக்க கடவுள் பேர் போல இருக்கே என்று நினைத்தேன்.

மீண்டும் America வரும் Mike தனது தந்தை காயத்தாலும், உடல் நலக்குறைவால் இழந்த அதிகாரத்தை எப்படி மீட்டு தனதாக்கி கொள்கிறான் என்று படம் விவரிக்கிறது.

மீண்டு வரும் Mikeன் குரல், நடை, தலை அலங்காரம், பார்வை அவன் Familyயை பாதுகாக்க எதுக்கும் தயாராகி விட்டான் என்பதை உணர்த்துகிறது. War Veteran and Lover Boy Mikeஆக அறிமுகமாகி மெதுவாக Corleone Familyயின் Don ஆக பொறுப்பு எடுத்து கொள்கிறான்.

இதன் பின்னர் ஓய்விலிருக்கும் Vito Corleone மகன் Mike உடன் பேசும் காட்சி எப்படி தேவர் மகன் படத்தில் பயன்படுத்த பட்டிருந்தது என்று எளிதாக கண்டு கொள்ள முடிந்தது.

'I told you. I can handle it, I'll will handle it.'  என்று அதிகமாக கவலை கொள்ளும் தந்தையை சமாதானம் செய்கிறான் Mike. 'Santino, Fredo... but I never wanted you for this.' 'Senator Corleone, Governor Corleone' என்று Corleone Familyயை legitimate ஆக ஆக்குவதற்கான கனவை விட்டு செல்கிறார் Don Vito Corleone.

தந்தையின் மறைவுக்கு பின்னர் வரும் காட்சிகள் என்னற்ற தமிழ் மற்றும் பிற இந்திய மொழி படங்களில் அப்டியே பயன்படுத்த பட்டுள்ளன. அது Al Capone உத்தரவில் உண்மையில் அமெரிக்காவில் நடந்த St. Valentine's Day Massacre சம்பவத்தின் தழுவல்.

படம் நாவலை தழுவி எடுக்க பட்டது என்று அறிந்து நாவலை படிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். 2008ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே ஆங்கிலத்துறைக்கு இருந்த நூலகத்தை கண்டு நிச்சியம் The Godfather புத்தகம் அங்கே இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் Godfather எழுதிய Mario Puzoவின் மற்றொரு நாவலான Omerta இருந்தது, அதை வாசித்தேன். நம்மூர் R K Narayanனின் Malgudi போல இவருக்கு Sicily, Italian Mafia தான் கச்சா பொருள் என்று புரிந்து கொண்டேன்.

அதே வருடம் நடந்த புத்தக காட்சியில் The Godfather வாங்கி படித்தும் விட்டேன். ஒரே நாவல் The Godfather I & II என்று இரண்டு படங்கள் ஆகியிருப்பது கண்டு அசந்து விட்டேன்.

பொதுவாக படம் எப்போதுமே நாவல் போல இருப்பதில்லை. Life of Pi ஒரு உதாரணம். என்ன தான் graphics எல்லாம் இருந்தாலும் புத்தகம் படித்தவர்கள் படம் சுமார் தான் என்று சொல்லுவார்கள்.

ஆனால் The Godfather படம் நாவலை விட மிக கச்சிதமாக இருந்தது. அதற்கு Marlon Brando, Al Pacino என்ற ஆளுமைகளும், இயக்குனரின் இத்தாலியா பின்புலமும் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் The Godfather படம் முதல் முறை பார்த்து 10 வருடம் ஆக போகிறது. இந்த 28 வருட வாழ்க்கையை படம் பார்ப்பதற்கு முன், பார்த்த பின் என்று இரண்டாக பிரிக்கும் அளவுக்கு இப்படம் என்னை முற்றிலும் புதிய ஆளாக மாற்றி விட்டது.

கல்லூரி படிக்கும் போது Brando போலவும், Pacino போலவும் ஆங்கிலம் பேசி பார்ப்பேன். ஒரு செயல் வீரனாக இருக்க வேண்டும் என்று பொது பிரச்சினையில் தலையிட்டு வில்லங்கத்தை இழுத்து வருவேன். ஒரு குட்டி Don ஆக என்னை கற்பனை செய்து கொள்வேன். நட்பு வட்டாரமும் எனக்கு உறுதுணையாக இருந்தது.

அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் ஒரு வருடம் பொது செயலாளராக இருந்தேன். அது Election நடக்காமல் unopposed ஆக கிடைத்த பதவி. இதெல்லாம் The Godfather பார்த்தும், படித்தும் என் ஆளுமையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த மாதிரி பொறுப்புகள் தேடி வரும் அளவுக்கு வளர்ந்தேன் என்பதில் எனக்கு சந்தேகமும் இல்லை.

இந்த ஆளுமை உருமாற்றத்தால் என்னை தேடி வருபவர்களுக்கு உதவி  செய்கிறேன் பேர் வழி என்று நானே பிரச்சினைகளை தலையில் தூக்கி வைத்து கொள்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்கள், எனக்கு நெளிவு, சுளிவு தெரியவில்லை, சூது வாது காணாது என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களில் யார் கூட்டத்தோடு ஆமாம் சாமி போடுவா, யார் விலகி நிப்பா என்பதை என் உள்ளுணர்வு சொல்லி விடும்.

அதாவது The Godfather போன்ற ஒரு படத்தை பார்த்து புரிந்து கொள்ள திராணி இல்லாதவர்கள். அதனால் தனக்கென ஒரு ஆளுமையை உருவாக்கி கொள்ள முடியாதவர்கள் தான் மந்தையாடு போல இருப்பார்கள்.

இன்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படித்து விட்டேன், ஆயிரக்கணக்கான சினிமாக்கள் பார்த்து விட்டேன், அத்தனைக்கும் அடித்தளம் நான் மதுரையில் 20 ரூபாய்க்கு வாங்கிய The Godfather DVD தான்.

ஆனால் அதற்கு முன்னால் 10 வயசு பையனுக்கு எதுக்கு Manorama Year Book என்று பெரிய மனுஷ தனமாக சிந்திக்காமல் அதை வாங்கி கொடுத்து என்னை அவையத்து முந்தியிருக்க செய்த எனது அப்பாவை நினைத்து பெருமை படுகிறேன்.

பின் குறிப்பு:

என் நண்பர்களை நான் எப்போதும் இரண்டாக பிரிக்கிறேன். The Godfather படம் பார்த்த நண்பர்கள், பார்க்காத நண்பர்கள். பார்த்த நண்பர்கள் நான் சொல்லும் விசயத்தை தெளிவாக புரிந்து கொள்வர். பார்க்காத நண்பர்கள் நான் ஏதோ நடைமுறை சாத்தியம் இல்லாத விசயத்தை பற்றி பேசிகிட்டு இருக்கேன் என்பார்கள்.

இப்போ நம்ம ஊர்ல யாருக்கிட்டாயவது Godfather படம் பாத்திருக்கியான்னு கேட்டா, 'அஜித் படம் வரலாறு, அத தான சொல்றீங்க' அப்டிம்பாங்க.

சந்தேகம்னா try பண்ணி பாருங்க.