Saturday 25 March 2023

15 நொடி முடிவிலி. 15 Second Infinity.

“In the future, everyone will be world-famous for 15 minutes.”
- Andy Warhol (He said that in the Year 1968)

மனிதன் பணம், அதிகாரம் தவிர்த்து ஒன்றை அடைய பெரும்பாடு படுகிறான் என்றால் அது இறவாப்புகழுக்காக தான். அது மனிதராக பிறப்பவரில் வெகு சிலருக்கே அருளப்படுகிறது. புகழை அடைந்து அதை தக்க வைக்க முடியாமல் போவது போன்ற  துயரம் வேறில்லை. 

இறவாப்புகழ் என்பது தன் காலம் தாண்டியும் மக்கள் மனதில் நிலைத்திருப்பது. மக்களின் அன்றாட பேச்சில் தவிர்க்க முடியாத படிமங்களை உருவாக்கியிருப்பது. கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி போன்ற பெரும்கவிஞர்களுக்கு தான் அது சாத்தியம் ஆகியிருக்கிறது.  

பாரதி இறந்த அன்று அவருடைய ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 8 பேர். பாரதி காலத்தில் பிரபலமாக வாழ்ந்த பலர் இன்று வெறும் பெயர் மட்டுமே. வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு. 
ஆனால் இன்று பாரதி தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத அடையாளம். அவர் எழுதிய வரிகளில் இருந்து தான் ஒரு இனமாக நமது கனவுகள், லட்சியங்கள் எழுகின்றன. 

பாரதி எந்த அங்கீகாரமும் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார். பிரபலம் ஆவதற்கு மெனக்கிடவில்லை. கவிதை அவரது தொழில் என்று சொல்லிவிட்டு அதன் படியே வாழ்ந்து மறைந்தார். நாம் பின்னோக்கி பார்த்து அவரின் பங்களிப்பின் இன்றியமையாத தன்மையை புரிந்து கொள்கிறோம். அவரை கொண்டாடுகிறோம். 

21ம் நூற்றாண்டில் மனிதராக பிறந்த அனைவரும் இறவாப்புகழை அடையாவிட்டாலும் 15 நொடி பிரபலமாக வலம் வருவதற்கான வாய்ப்பை இணையம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. 15 நிமிடங்கள் அல்ல 15 நொடி. 

பிரபலம் என்பது ஈசலின் ஆயுளை விட குறைவான ஆயுளை கொண்டது என்பதை அந்த 15 நொடி பிரபலங்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதி தன்னுடைய கடிதம் வெளியிடப்பட்டால் அதைக்கண்டு புளங்காகிதம் அடைந்தவர்கள் தான் நாம். திருமண பத்திரிக்கையில் பெயர் போடவில்லை என்று சண்டையிட்டவர்கள் தனி ரகம். 

பின்னர் அது தொலைக்காட்சியில் தோன்றுவதாக பரிணமித்தித் தது. இன்று நிறுவன ஊடகங்கள் யாருக்கும் தேவை இல்லை. சமூக ஊடகங்கள் வழி தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் வழி ஒன்று திறந்திருக்கிறது. கையில் திறன் பேசியும், பிரபலம் ஆகும் எண்ணமும் உள்ள அனைவரும் அங்கே வந்து கடை திறக்கின்றனர். 

இணைய, சமூக ஊடகங்கள் வழி பிரபலம் ஆகும் சிலரை தொலைக்காட்சி, சினிமாக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மாநிலம் அறிந்த முகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்த இணைய பிரபலங்கள் அப்படி என்ன செய்கிறார்கள்? 2வது முறை அல்ல முதல் முறையே முழுதாக பார்க்க தகுதியில்லாத தமிழ் சினிமாவிற்கு விமர்சனம் செய்கிறார்கள், ஏற்கனவே உள்ள சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள், wiki pedia வில் உள்ளதை படித்து விட்டு Oxford சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை என்பது போல பேசுகிறார்கள்.

ஊரில் எங்கே சாப்பாடு கடை திறந்தாலும் போய் தின்று விட்டு ஆகா என்கிறார்கள். Below the belt joke சொல்லி சிரிக்க வைக்கிறார்கள். சுருக்கமாக தன்னுடைய மூடத்தனத்தை கேளிக்கையாக சமூக ஊடகங்களில் பரப்பி தினமும் என்னை கவனி என்கிறார்கள். 

இணையம் வந்த பிறகு நம்முடைய நேரம் நிறைய மிச்சம் ஆகியிருக்கிறது. அப்படி மிச்சம் ஆன நேரம் அனைத்தையும் இணையமே எடுத்துக்கொள்கிறது. விளைவாக நாளின் இறுதியில் எதையுமே உருப்படியாக செய்யாத உணர்வுக்கு ஆளாகிறோம். 

சமூக ஊடகங்களால் எப்படி நம் சமூக வாழ்க்கை மேம்பட்டு விடவில்லையோ அதே போல அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் குறைந்தும் போகப்போவதில்லை. 

நம் திறன் பேசியில் இருக்கும் எண்ணற்ற செயலிகள் நம்முடைய கவனத்தை கோரிக்கொண்டே இருக்கின்றன. அதை நாம் ஒவ்வொரு முறை கையில் எடுக்கும் போதும் என்ன காரணத்துக்காக எடுத்தோம் என்பது மறந்து போகும் அளவுக்கு அது நம் கவனத்தை சிதறடித்து கொண்டிருக்கிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் திறன் பேசி பயன்படுத்தும் அனைவரும் இந்த 15 நொடி முடிவிலியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என்று இணையத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.  இதிலிருந்து வெளியேறும் வழியும் யாருக்கும் புலப்படவில்லை. 

இந்த முடிவிலியில் சிக்கிக்கொண்டதால் நாம் இழப்பது என்ன? 

முதலாவதாக நம்மால் கேளிக்கையை கூட கவனச்சிதறல் இல்லாமல் அனுபவிக்க முடிவதில்லை. திரைப்படத்திற்கு போனால் கூட அதை அனுபவித்து பார்க்காமல், படம் பார்க்க போனதை இணையத்தில் அறிவித்து கொண்டே இருக்கிறோம். அந்த அறிவிப்புக்கு வந்த எதிர்வினை என்ன என்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்கிறோம்.

செய்தித்தாள் படிப்பதை விட்டுவிட்டோம். உருப்படியான விவாதம் எதுவும் நிகழாமல் அனைத்தும் 15 நொடி காணொளியாக, meme ஆக சுருங்கிக்கொண்டிருக்கிறது. வாரப்பத்திரிக்கைகள் எந்நேரமும் நிறுத்தப்படலாம் என்கிற அளவிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

சினிமா பாடலை கூட முழுதாக கேட்பது இல்லை. அடுத்து அடுத்து என்று தாவி செல்கிறோம். Fear of Missing Out Factor நம்மை இணையத்தில் கட்டிப் போடுகிறது. நம்மை விட்டு விட்டு உலகத்தில் முக்கியமான ஏதோ ஒன்று நடந்து விடும் என்பது போல் நாமும் "stay connected" ஆக இருக்கிறோம்.  

செவ்வியல் இலக்கியம் அல்ல செவ்வியல் சினிமாவை பார்ப்பதற்கே இன்று ஆட்கள் இல்லை. இந்த கவனச்சிதறலை வென்று ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட Genre ல் உள்ள classic படங்களையோ பார்க்கும் திறன் உள்ளவர்களை காண்பது அரிதாகி வருகிறது. 15 நொடிகளாக நாளுக்கு 5 மணி நேரத்தை இணையத்தில் செலவு செய்பவர்களால் ஒரு 3 மணி நேர சினிமாவை பார்க்க முடியவில்லை. 

இணையத்தில் மாய்ந்து மாய்ந்து வாசிப்பவர்கள் fragmented reading, cursory reading வழி ஒரு fragmented personality ஆகி விடுகிறார்கள். அவர்கள் வாசித்த தகவல்களை கொண்டு ஒரு தர்க்கத்தை உருவாக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். நிறைய வாசித்து எதுவும் எஞ்சாமல் ஆகி விடுகிறது. 

இதற்கான மாற்று 24 மணி நேர இணையம் கிடைப்பதற்கு முன்னால் நம்முடைய நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்தோம் என்று யோசிப்பது தான். பதின் பருவத்தினராக நம்முடைய "hobby" என்னவாக இருந்தது என்று நினைவுறுத்திக்கொள்வது தான். அதில் மீண்டும் ஈடுபட முடியுமா என்று பார்க்கலாம்.

அதை கடந்து வந்து விட்டவர்கள் அவரவர் தேர்வுக்கு ஏற்ப ஒரு துறையை கண்டடைந்து, அது குறித்து கற்று, அறிந்து கொள்வதில் நேரத்தை செலவிடலாம். மனதை ஓரிடத்தில் குவிய வைக்கும் செயல்களில் ஈடுபட முடியாதவர்கள் "பல வேடிக்கை மனிதர்களாக" மாறி குடி, போலி ஆன்மீகவாதிகள், அதீத அரசியல் நிலைப்பாடு என்று எங்காவது போய் அடைக்கலம் ஆகிவிடுகிறார்கள். 

***

No comments:

Post a Comment