உங்களுக்கு யாரையாவது பார்த்த உடன் உலக்கையை எடுத்து அடிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா?! அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் நமது கதையின் நாயகன் சிவ சுந்தரை சந்திக்கவில்லை என்று அர்த்தம். உலக்கையால் அடித்தால் நீண்ட நேரம் அடிக்க முடியாது அல்லது பட்டுனு உயிர் போய் விடும் என்று நினைப்பவர்கள் பழைய ஈக்க மார், ஈரத்தில் நனைத்த துண்டு, 2 litre plastic water bottle இப்படி அதிக காயம் ஏற்படுத்தாத ஆனால் அடிப்பவருக்கு ஒரு வித கிளர்ச்சி, ஜிலு ஜிலுப்பு அளிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தலாம். நீண்ட நேரம் தலையிலும், கையிலும், முதுகிலும், முட்டியிலும் சொத்து சொத்து என்று மொத்தலாம்.
அது எப்படி முன்ன பின்ன தெரியாத ஆளை அடிப்பது என்றால் உங்களுக்கு அவருடைய bio data வை தருகிறேன் நீங்கள் அப்புறம் விடுமுறை எடுத்துக்கொண்டு அவரை அடிக்க வருவீர்கள்.
சிம்மக்குரலோன் சிவ சுந்தர் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்ன புரிந்து கொள்ள வேண்டும்?! அவருடைய குரல் வளம் குறித்து தான். காக்கா, கழுதை, கல்லால் ஏறி வாங்கிய பன்றி இவையெல்லாம் சேர்ந்து ஒரு மனிதக்குரலில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மேற்படி விலங்குகளை உதாரணம் சொன்னதற்காக அந்த விலங்குகளிடமும் விலங்குகள் நல அமைப்புகளிடமும் மன்னிப்பு கேட்கிறேன். அந்த அமைப்புகளுக்கு கோமாதா எங்கள் குல மாதா என்ற பாட்டை dedicate செய்கிறேன்.
சிவ சுந்தர் ஒரு மேலாண்மை பட்டதாரி. MBA, MBA - இரண்டுமுறை வேகமாக படிக்கவும். Harvard பல்கலைக்கழகம் இருக்கும் அமெரிக்காவே பொருளாதார மந்த நிலை அடையும் போது இந்தியாவில், அதுவும் சாராயம் காய்ச்சி கல்வி தந்தை ஆனவர் கட்டிய கல்லூரியில் MBA படித்த சிம்மக்குரலோன் மேலாண்மையில் சிறந்து விளங்குவார் என்றால் அவரைப்பெற்றவர்களே நம்ப மாட்டார்கள்.
இப்படி படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத - போக விருப்பமில்லாத என்றெல்லாம் சொல்ல முடியாது - வந்து சேரும் இடம் எதுவாக இருக்கும்? அதே தான்!!! சிவ சுந்தர் கல்லூரி பேராசிரியர் ஆகி விட்டார். அவருடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். கடைசியாக வாத்தியாரின் பிள்ளை வாழ்க்கையில் விளங்கியதை எப்போது பார்த்தீர்கள்?
ஒரு நாட்டில் ஒரு தொற்று நோய் பரவுகிறது என்று வைத்துக்கொள்வோம். நோய் பரவுவதை தடுக்க அரசாங்கம் என்ன செய்யும்? நோய் பாதித்த மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும். மற்ற நாடுகள் நோய் பரவும் நாட்டின் மக்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பர். இதெல்லாம் தாண்டி நோய் வேறொரு நாட்டிற்கு பரவி விடுவதும் உண்டு.
ஆம், சிவ சுந்தர் தீப்பெட்டி, பட்டாசு தொழில் மூலம் பணம் சேர்த்து கல்லூரி ஆரம்பித்த முதலாளியிடம் வேலைக்கு சேர்ந்தார். தற்போது வேலை பார்க்கும் கல்லூரியில் சிறந்த அடிமை, சோத்து மாடன், சொம்பு தூக்கி, என்று பெயர் வாங்கிய SS - சிவ சுந்தரின் சுருக்கம்- தீப்பெட்டி முதலாளி கல்லூரியில் இருந்து எடுத்தார் ஓட்டம். வந்தவர் அங்கிருந்து நோயை இங்கே கொண்டு வந்துவிட்டார். அதற்காக இது நோய் இல்லாத கல்லூரி என்று சொல்ல முடியாது. பக்க வாதத்துடன் உடன் குஷ்ட ரோகம் சேர்ந்த கதை தான்.
SS பார்ப்பதற்கு ஒரு ஐந்தேமுக்கால் அடி உயர கரடி போல இருப்பார். இன்னும் பத்து ஆண்டுகளில் கரடியாகவே ஆகி விட வாய்ப்பு உண்டு. தீனி அப்படி. சோடாப்புட்டி கண்ணாடி அணிந்திருப்பார். முகம் எப்போதும் குளிச்சு நாலு நாள் ஆச்சு என்கிற பாவனையில் இருக்கும். பிறகு உடைகள் எப்படி இருக்கும் என்று நீங்கள் யூகிக்கவும். 2 செட்டு பூரி, கேசரி, ஒரு பொங்கல், 2 வடை அப்புறம் காபி என்று எளிமையான காலை சிற்றுண்டி. சிற்றுண்டியின் எடையை விட இரண்டு மடங்கு எடை கொண்ட மதிய சாப்பாடு, மாலை அமையும் நொறுக்கு தீனி, இரவு ஆறிலிருந்து எட்டு தோசை சாப்பிடுவார்.
நன்றாக சாப்பிடுபவரை கண் வைக்கக்கூடாது. அது சாப்பிடுபவரை. இவர் திண்பவர். தட்டில் இருந்து யாரேனும் எடுத்து விடுவார்கள் என்ற அவசரகதியில் வாய் நிறைய உணவு இருக்கும் போதே மேலும் திணிப்பார். திணித்தபடியே சிம்மகுரலால் கருத்து சொல்வார். கருத்து சொல்லிக்கொண்டே கண்ணாடியின் மேல் முட்டைக் கண்ணை சோடாக்குள் உருளும் கோலி போல உருட்டுவார்.
இத்தனையும் திண்பவர் தான் அசைவம் சாப்பிடுவதில்லை என்றும் சொல்வர். தான் சாதிய படிநிலையில் பிராமணருக்கு அடுத்த சாதி என்றும் அதற்காகவே சிறப்பு சலுகைகள் எதிர்பார்ப்பது தனது உரிமை என்பது போல நடந்து கொள்வார். இப்படி சாதி பெயர் சொல்லி சலுகைக்கு அலைபவர் வேலை பார்ப்பார்? பார்ப்பார். புறம் பேசுதல், குழி பரித்தல், போட்டுக்கொடுத்தல், தூண்டி விடுதல், கெடுத்து விடுதல் இப்படி நிறைய.
மேலாண்மை என்றால் மோசடி என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு தேவை இல்லாத பொருளை உருவாக்கி அதை அவனை வாங்க வைப்பதில் என்ன மேலாண்மை புண்ணாக்கு இருக்கிறது. பிரச்சினை என்ன வென்றால் இந்த புண்ணாக்கு தின்ற மேலாண்மை மாடுகள் கல்லூரியை வழி நடத்த கிளம்புவது தான். வியாபாரம் என்று ஆன பிறகு புண்ணாக்கு என்றால் என்ன? கல்லூரி என்றால் என்ன?
மேலாண்மை படித்து விட்டதால் இவர்கள் கல்லூரியின் இயக்குனர்கள் ஆகி விடுகிறார்கள். அப்படி கல்லூரியை இயக்கும் மேலாண்மை படித்த, சூதும் வாதும் நிறைந்த - அவர்கள் மேலாண்மை, சாணக்கியத்தனம் என்று சொல்வார்கள்- நபரின் இடது கையாக தன்னை வரித்துக்கொண்டவர் SS. மேற்படி நபருக்கு வலது கை போக மூன்றாவது கை உண்டு. அந்த நபரையும் அவருடைய கைகளையும் பற்றி தனியாக எழுத வேண்டும்.
தன்னால் எந்த வேலையைம் செய்ய முடியாதவன் தனக்கு மேலே உள்ளவன் பெயரை சொல்லி பயம் காட்டிக்கொண்டே இருப்பான். ஆனால் இவன் உருப்படியாக ஒன்றும் செய்ய மாட்டான். மாணவர்களில் இருந்து சக பேராசிரியர் வரை 'சாருக்கு தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும், சாருக்கு தெரிஞ்சா கோப படுவாங்க, சாருக்கு தெரிஞ்சா action எடுப்பாங்க' என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பார்.
சார் Big Boss போல CCTV யில் நாளெல்லாம் ஊமைப்படம் பார்த்துக்கொண்டு SS பேச்சை தான் கேட்டு நடப்பதாக கல்லூரியில் ஒரு பேச்சு உண்டு. அது அவருக்கே தெரிந்தாலும் அலட்டிக்கொள்ள மாட்டார். 'மேலாண்மைல' என்று கடந்து சென்று விடுவார்.
இதெல்லாம் இந்த SS க்கு சாதகமான அம்சங்கள். பின்னர் சாதி. சாதியால் தான் சாது என்று அவர் சொன்னாலும், சொல்லும், செயலும் அப்படி இல்லையே என்று அனைவருக்கும் தெரியும். பின்னர் தான் ஆன்மீகமான ஆள் என்று காண்பிக்க வாரத்தில் என்றைக்கு குளிக்கிறாரோ அன்று நெத்தியில் மலைத்தொடர் போல சந்தனத்தால் லிங்கம் வரைந்து அதில் குங்குமம் வைத்து பல்லைக்காட்டிக்கொண்டு அலைவார்.
ஆன்மீகம் என்றால் நீங்கள் விவேகானந்தர் என்றெல்லாம் கற்பனை செய்யக்கூடாது. இன்றைய தேதியில் ஆன்மீகம் என்பது நித்தியானந்தா, சத்குரு என்று சுருங்கிவிட்டது. இப்படி ஒரு குருவிடம் தான் சென்று மாட்டியதோடு விடாமல் மேலாண்மை படித்த மேதாவிகள், கணிப்பொறி படித்த விஞ்ஞானிகள் என பாதி கல்லூரியை இழுத்து விட்டார்.
ஏட்டு படிப்பிற்கும் சிந்தனைக்கும் சம்மந்தம் இல்லை பாருங்கள். இந்த குருவிடம் செல்லும் சீமாட்டிகளின் கணவர்கள் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பவர்கள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. பிறகு என்ன கேடு? அது அந்த சாமியாருக்கே வெளிச்சம். இந்த மேலாண்மை படித்த பதர்கள் மாணவ, மாணவிகள் என்ன மாதிரி உடைகள் அணிய வேண்டும் என்று முடிவு செய்ய காட்டும் ஆர்வத்தை கொஞ்சமேனும் தங்கள் வாழ்க்கையில் காட்டினால் சாமியார் ஏன் தேவைப்படுகிறார்!!!
இந்த சாமியார் பாதிப்பில் வாழும் - அப்படி வாழுவதாக காட்டியும் கொள்ளலாம் அல்லவா?!- SS தனது மாணவர்களில் ஒன்றிரண்டு வழி தவறிய ஆடுகளை மார்க்கெட்டிங் செய்து சாமியார் பக்கம் இழுத்து விடுவார். அப்படி சென்று விட்டு வந்த ஒருத்தன் சொன்ன தகவல் SS மீது பரிதாபத்தையே ஏற்படுத்தியது. அதாவது ஒருவன் தங்கள் வீட்டின் முன் சாக கிடந்தாலும் தண்ணீர் குடுக்க மாட்டார்களாம், ஏனென்றால் தங்கள் புண்ணியம் அவனுக்கு போய் விடுமாம். அவனை சாக விட்டால் வரும் பாவத்தை எடுக்க என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
அட்டவணை போட்டு ஆட்களை கெடுப்பதில் SS ஒரு expert. இவருடைய நண்பர்கள் இவருடன் சேர்ந்த பிறகு தான் இப்படி ஆகிவிட்டார்களா அல்லது இப்படித்தான் பிறந்தார்களா என்று புலன் விசாரணை செய்வது சமூகத்திற்கு நல்லது. ஒரு நபரை கெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அவரின் தோளில் கையைப்போட்டு 'உங்களை பத்தி சார்கிட்ட சொல்லிருக்கேன், நல்லா work பண்றீங்கன்னு' என்பார். இங்கே சார் என்பவர் இயக்குனர்.
கல்லூரி முதல்வர், செயலர் என்று ஆளுக்கு ஏற்றார் போல் துதியை மாற்றுவார். செயலர் கண் முன் முதல்வர், இயக்குனர் எல்லாம் ஒரு வகையில் டம்மி தானே, அதுவும் செயலரின் Man Friday போல செயல்படுவார். 'அய்யா கோபப்பட்டு பாத்ததில்லையே, அய்யாவுக்கு பயங்கரமா கோபம் வரும், அய்யாவுக்கு கோபம் வந்தா அவ்வளவு தான்' என்று அய்யாவின் கோப பரிமாணங்கள் பற்றி கல்லூரியில் அவருக்கு அறிமுகம் ஆகும் அனைவருக்கும் உரையாற்றுவார். அய்யாவுக்கு தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அதே வேலைக்கு அரசாங்கம் தரும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு தருகிறோமே என்று தன் மீதே கோபம் வராதா என்று யாரும் இது வரை கேட்டதில்லை. இந்த பெரியமனிதர்கள் தங்களுடைய கோபத்தை ஒரு முகமூடி போல பயன்படுத்துகிறார்கள். உண்மையில் தொடை நடுங்கியாக இருப்பார்களாக இருக்கும்.
முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் SS நாற்பது வயது மதிக்கத்தக்க உருவத்தில் இருக்கிறார். சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று வீட்டில் இருந்து கொண்டு, ஹோட்டல்களில் கணக்கு வைத்து தின்றுகொண்டு, இந்த கல்லூரி மாணவர்களின் மூளையில் சிந்தனை ஏதும் ஏறி விடாமல் பார்த்துக்கொண்டு, உடன் வேலை செய்பவர்களை கரையான் போல அரித்துக்கொண்டு இருக்கிறார்.
வேலைக்கு சேர்ந்த புதிதில் ஏதோ சித்து வேலையில் ஈடுபட்டதால் சீக்கிரமே வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டதாக ஒரு செய்தி உண்டு. அது உண்மைக்கு பக்கத்தில் இருக்க வாய்ப்பு அதிகம்.
SS இப்படி கரடி போல இருந்து கொண்டு குள்ளநரித்தனம் செய்தாலும் அவருடைய குரல் அவரை கோமாளி கதா பாத்திரம் ஆக்கி விடுகிறது. இது அவருக்கு சாதகமாக ஆகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்த கோமாளித்தனத்தால் இவர் மீது திரும்ப வேண்டிய பகை துறையில் உள்ள மற்ற ஆசிரியர் மீது திரும்பி விடுகிறது. மேலும் பெண் பிள்ளைகளிடம் தேவைக்கு அதிகமாக பல்லைக்காட்டும் இவர், மாணவர் ஒருவன் பேசி விட்டால், இயக்குனர், செயலர் என்று ஆரம்பித்து விடுவார். பெண்களுக்கு என்று ஒதுக்கிய பாதையில் கூச்சமின்றி போய் வருவார். வேறு எந்த ஆணும் சென்றால் தனது மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து விடுவார். இப்படி இவர் பெண்களுக்கான பாதையை பயன்படுத்துவதை பற்றி இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும் போது 'அந்த சொம்பு தூக்கியை யாரு ஆம்பிளையா மதிக்கிறா' என்று ஒரு பெண் சொன்னாராம்.
SS தனக்கு அபார இசை ஞானம் உள்ளதாக நம்பிக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் நடை பெறும் கலை நிகழ்ச்சியில் தனது வீங்கிய மூக்கை நுழைப்பார். ஒரு முறை பாடல் பாடி கூட்டத்தை கலைத்தும் இருக்கிறார். யார் என்ன பாடல் பாட வேண்டும், யார் முதலில் பாட வேண்டும், எந்த பாடல் அய்யாவிற்கு பிடிக்கும், எந்த பாடல் அய்யாவிற்கு வயிற்று கடுப்பை கொண்டு வரும் என்று அனைத்தும் அறிந்தவர்.
எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தன் குரலை விட கேட்பவர்களை பதறச்செய்யும் குரலுடைய தனது மாணவிகளில் ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அதாவது ஊர் உலகம் இவரை விட்டு விட்டு அந்த பெண்ணை கிண்டல் செய்யும் என்ற நம்பிக்கை தான். கல்லூரியை பூந்தோட்டம் என்பார், செயலரை செயல் வீரன், வள்ளல், பேரரசு என்று புளுகுவார், முதல்வரை வாழும் பாரதி என்பார். பாரதி சோற்றுக்கு வழியில்லாமல் அலைந்தார், இந்த முதல்வர் 15 லட்சம் காரில் வலம் வருகிறார். இயக்குனரை தனக்கு தெரிந்த ஆங்கில வார்த்தை வைத்து சிறப்பு செய்வார்.
பின்னர் கல்லூரியில் உள்ள மற்ற கைபுள்ளைகளுக்கு முன் தயாரிப்பு செய்து எகனை மொகனையாக எழுதி வைத்திருப்பார். இதெற்கெல்லம் மாணவர்கள் உருண்டு பிரண்டு சிரிப்பது தெரிந்தாலும் சீரிய முக பாவனையோடு தொகுத்து வழங்குவார்.
பாடம் எடுக்கும் விசயத்தில் மேலாண்மை அறிவை விளையாட்டு மூலம் போதிக்கிறேன் என்று நேரத்தை முழுங்குவார். படிக்க வைக்கிறேன் பேர்வழி என்று வராண்டாவில் மாணவர்களை உக்கார வைத்து CCTV முன் கிழக்கும் மேற்குமாக நடப்பார். தன்னை சீண்டிவிட்டான் என்று புரிந்து விட்டால் கொடும்பிராணி போல இருக்கும் தனது சக பேராசிரிய நண்பனை வைத்து அந்த பையனை மன சித்திரவதை செய்வார்.
தங்களது துறை கல்லூரியில் சிறப்பாக செயலப்படும் துறை என்று உப்பு கல்லுக்கு பெறாத போட்டிகளை நடத்தி, அதை நடத்துவதற்கு மாணவர்களிடமே பணம் புடுங்கி, பின்னர் ஒரு பயன்பாடும் இல்லாத பரிசு ஒன்றை கொடுப்பதற்கு பம்பரமாக சுழலுவார்.
படிக்கும் பிள்ளைகள் ஆர்வமாக கலந்து கொண்டு இதன் பின்னால் நிகழும் அரசியல் தெரியாமல் ஏன் சிறப்பாக செய்தும் முதல் பரிசு கிடைக்க வில்லை என்று கிடைத்ததை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சி நடத்தியவர்களை வாய் வலிக்க வைவார்கள்.
கல்லூரியில் கணிப்பொறி துறை தலைவி என்றால் யாருக்கும் பிடிக்காது. ஆனாலும் துஷ்டனை கண்டால் தூர விலகு என்ற விதிப்படி நடந்து கொள்வார்கள். போட்டிகளில் கணிப்பொறி மாணவர்கள் இரண்டாவதாக வந்தாலும் SS மாற்றி முதல் இடம் கொடுத்து விடுவார். ஏனென்றால் அந்த துறைத்தலைவி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அலைவார். செயலர் அய்யாவிடம் பொறுத்தி போடவும் வாய்ப்பிருக்கிறது என்கிற முன் எச்சரிக்கை தான். கணிப்பொறி தலைவியுடன் மோதலை தவிர்க்கவே இவ்வாறு மேலாண்மை துறையை நடந்து கொள்ள இயக்குனர் சொல்லியிருக்கார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் SS காலையில் முழுங்கிய 8 இட்லி செரிக்க கிழக்கும் மேற்குமாக நடந்து கொண்டிருந்த போது மாணவன் ஒருவன் செல்பேசியை புத்தகப்பையில் மறைத்து வைப்பதை கவனித்து விட்டார். ஆகா! வேலை வந்துவிட்டது என்று உற்சாகமானார். பையனை புத்தகப்பையோடு அழைத்துச்சென்றார்.
பையனிடம் செல்பேசியை பறிமுதல் செய்த அவர் password ஐ கேட்டார். பையனும் நேரம் கடத்தாமல் சொல்லிவிட்டான். சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பவர் தானே!! குறுகுறுப்புடன் whatsapp, facebook என்று துழாவ ஆரம்பித்தார். இதற்குள் மற்ற பேராசிரியர்கள் வந்து விடவே. நடந்தவற்றை மிக தீவிரமாக எடுத்து சொல்லிவிட்டு துழாவுவதை தொடர்ந்தார்.
வந்தவர்களும் தங்கள் பங்கிற்கு செல்பேசியை வாங்கி ஆராய்ச்சி செய்தனர். அவனுடைய வகுப்பில் இருக்கும் ஒரு மாணவியிடம் அவன் chat செய்வதை கண்டுபிடித்துவிட்ட குஷியில் ஒரு enquiry ய போட்டா தான் சரி வரும் என்று கண்ணாடியை நெற்றி மேல் ஏற்றி விட்டார் SS.
பையன் எதற்கும் மசியாமல் பதில் சொல்ல இவனை மடக்குவது எப்படி என்று இல்லாத புத்தியை தீட்டி யோசித்தார். பின்னர் phone தன்னிடம் இருக்கும் என்றும் மறுநாள் அவன் பெற்றோருடன் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அவனை அனுப்பிவிட்டார்.
Password இருக்கும்போது என்ன கவலை? அடுத்த 24 மணி நேரத்தில் யாரெல்லாம் message செய்கிறார்கள் என்று பார்க்கலாமே என்று குதுகலமானர்.
கல்லூரி முடிந்த அரை மணிநேரத்தில் முதல் அழைப்பு வந்தது. வாயில் இருந்து சமோசாவை முழுங்கியவாறு ஹலோ என்றார்.
"டேய் கே*&^%$# எங்க இருக்க?"
"நீங்க யாரு?"
"ஏன்டா மு@#$%^&* number save பண்ணி வைக்கலை?"
ஆகா! பதிஞ்சு வைக்காத எண் என்றால் பெண் பிள்ளையாக இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டோமே என்று சுதாரிப்பதற்குள் phone செய்தவன் SS இதுவரை கேள்வி படாத வார்த்தைகளில் கிழித்து விட்டான். மிரண்டு போய் போனை வைத்து விட்டார்.
வேர்க்க விருவிருக்க காப்பியை உள்ளே இறக்கியவர் குறுந்செய்தி வந்த சத்தம் கேட்டு ஆர்வமானர். DP யில் சமந்தா படமும் சுவேதா என்ற பெயரும் இருந்தாலும் message இப்படி இருந்தது.
"டேய் --+×÷?=~ என்ன இன்னும் வரலை?"
SS கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
"எங்க வரணும்?" என்று கேட்டார்
"ஒ!|\/^%$#@ அதுக்குள்ள மறந்துட்டியா" என்று பதில் வந்தது
"கெட்ட வார்த்தை இல்லாம உனக்கு பேச வராதா?"
"அட யோ+×÷?°*&^ நேர்ல வா ##@@$$%% மிதிக்கிறேன்"
Mobile data வை off செய்தவரின் முகம் குளவி கூட்டிற்குள் கை வைத்தவன் போல மாறி விட்டது.
ஒரு நாள் கடலை போடலாம் என்று வாங்கி வந்தோமே என்று நினைக்க துவங்கியபோது ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. True Caller கமலி என்று பெயர் காட்ட நம்பிக்கையுடன் அழைப்பை ஏற்றார். Hello சொல்வதற்குள் எதிர்முனையில் ஒரு பாட்டி "எடுபட்ட பயலே, ^%&$ மகனே எங்க டா போன? என்று ஆரம்பித்தது.
***