உறவுச்சிக்கல்களை பேசும் படங்களை அதிகம் பார்த்ததாக நினைவு இல்லை. The Salesman படமே சட்டென நினைவுக்கு வருகிறது. அதன் பின்னர் The Bridges of Madison County. முதல் படம் Oscar வாங்கிய ஈரான் நாட்டு திரைப்படம். இரண்டாவதில் Spaghetti Western அதிரடி படங்கள் மூலம் உலகமெங்கும் அறியப்பட்ட Clint Eastwood ஒரு புகைப்பட கலைஞராக நடித்திருப்பார். இப்பட்டியலில் The Salesman பட இயக்குனரின் A Separation படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இங்கே நாம் பேசவிருக்கும் Silent Light, Mexico நாட்டில் வசிக்கும் Mennonites எனப்படும் இன மக்களிடைய நடக்கும் கதை. ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை என்பதே சரியாக இருக்கும்.
நீங்கள் எத்தனை சர்வதேச படங்கள் பார்த்திருந்தாலும் இப்படம் புது அனுபவமாகவே இருக்கும். நாம் படம் பார்கிறோமோ அல்லது documentary பார்க்கிறோமா என்ற குழப்பம் தோன்றும் அளவுக்கு நடிகர்கள் நடிப்பது போலவே எங்கும் தனியாக தெரிவது இல்லை.
கதா நாயகன் -இப்படி படங்களில் அப்படி சம்பிரதாயமான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமா என்றும் தெரியவில்லை- Johan தனது மனைவி Esther மற்றும் ஆறு குழந்தைகளுடன் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அவருடைய வாழ்க்கையில் வரும் Mid Life Crisis தான் படத்தின் மையம்.
Johan னுக்கு Marianne என்ற பெண் மீது காதல். மனைவியை பிரியவும் மனம் இல்லை. Marianneஐ விட்டு விலகவும் மனம் இல்லை. இந்த காதலை அவர் மறைத்து வைப்பதும் இல்லை. நண்பன், மனைவி, அப்பா என்று அனைவரிடமும் சொல்லி ஆலோசனை கேட்கிறார்.
'திரைப்படம் என்பது காட்சி ஊடகம்' என்ற சொற்தொடரை பல முறை கேட்டிருப்பீர்கள் அதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அதற்காக குறியீடு வைக்கிறேன் பேர்வழி என்று உயிரை எடுப்பதில்லை. வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் தான் காட்சிகள். அவை மனம் போல தங்கள் நேரத்தை எடுத்து கொண்டு திரையில் வளர்கின்றன.
Johan தனது வாகனத்தை செம்மண் சாலையில் செலுத்தும் காட்சி.
Johan னின் குழந்தைகள் குளத்தில் குளித்து விளையாடும் காட்சி.
Johan, Esther மற்றும் குழந்தைகள் உணவருந்தும் காட்சி. இது படத்தில் இரண்டு முறை வருகிறது.
இப்படி காட்சிகள் தான் படத்தை நகர்த்துகின்றன. மிக குறைவான வசனங்கள்.
தந்தையும் மகனும் சந்தித்து பேசிக்கொள்ளும் காட்சி மிக நுட்பமாக கையாளப்பட்டுள்ளது.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல Johan, Marianne பேசி பிரிந்து விட்ட பிறகும் Marianneனிடம் இருந்து தகவல் வர அதை Johan மறைக்காமல் Esther இடம் சொல்லி விடுகிறார். இது Estherன் இதயத்தை நொறுக்கி விடுகிறது.
இதன் பின்னர் நிகழும் காட்சிகள் ரசிகர்களின் யூகத்திற்கு விடப்பட்டுள்ளன.
படத்தில் முதல் காட்சியாக சூரிய உதயமும், இறுதி காட்சியாக சூரிய அஸ்தமனமும் ஒரே shot காட்சியாக வருகிறது. Pure Magical என்று சொல்வார்களே?! அது போல.
எந்த ஒரு கலாச்சாரமும் நிலைத்து நிற்க அது பேசும் மொழியில் கதைகள் எழுதப்பட்டும், வாசிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வர வேண்டும். கதைகள் என்றால் நல்லவன் கெட்டவன் என்ற இரு துருவ கதைகள் அல்ல. அந்த சமூகத்தின் மன ஆழத்தில் உள்ளவை கதைகளாக எழுதப்பட வேண்டும். அவர்களின் பயம், நம்பிக்கை, துரோகம், வெற்றி, தோல்வி என்று அனைத்தும் எழுத்தில் பதியப்பட வேண்டும்.
காட்சி ஊடகத்தின் பலம் அது எழுத்தை விட அதிக நபர்களை சென்று சேரும் என்பது தான். அதற்காக எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றோ அதனுடைய வீச்சை குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. இங்கே Mennonites சமூகத்தை பற்றி காட்சி மூலமாக அறியும் நாம் அவர்களின் கதைகளையும் தேடி செல்லலாம்.
புதிய மொழி, புதிய மக்கள், புதிய கலாச்சாரம் மற்றும் புதிய நிலக்காட்சிகளுக்காக இந்த படத்தை ஒரு முறை பாருங்கள்.